சட்டசபை தேர்தலில் காங்கிரசை பின்னுக்கு தள்ளிய தேசியவாத காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுகிறது


சட்டசபை தேர்தலில் காங்கிரசை பின்னுக்கு தள்ளிய தேசியவாத காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுகிறது
x
தினத்தந்தி 25 Oct 2019 4:30 AM IST (Updated: 25 Oct 2019 3:36 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய சட்டசபையில் கூட்டணி கட்சியான காங்கிரசை தேசியவாத காங்கிரஸ் பின்னுக்கு தள்ளியது.

மும்பை,

மராட்டிய சட்டசபையில் கூட்டணி கட்சியான காங்கிரசை தேசியவாத காங்கிரஸ் பின்னுக்கு தள்ளியது. இதன் மூலம் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி அரசு அமைந்தால், தேசியவாத காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுகிறது.

3-வது இடம்

மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் காங்கிரஸ் அதிகபட்சமாக 147 தொகுதிகளில் போட்டியிட்டது. தேசியவாத காங்கிரஸ் 121 தொகுதிகளில் களம் இறங்கி இருந்தது.

இதில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரசை விட தேசியவாத காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. அதன்படி தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களில் வெற்றி வாகை சூடியது. காங்கிரஸ் 45 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் மூலம் சட்டசபை தேர்தலில் தேசியவாத காங்கிரசுக்கு 3-வது இடம் கிடைத்து உள்ளது. காங்கிரஸ் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

கடந்த தேர்தல் நிலவரம்

கடந்த 2009 சட்டசபை தேர்தலின் போது கூட்டணி அமைத்து இரண்டு கட்சிகளும் தேர்தல் களம் கண்டன. அப்போது காங்கிரஸ் 82 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 62 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன. ஆட்சியும் அமைத்தன.

கடந்த 2014 சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு குளறுபடியால் கூட்டணி முறிவு ஏற்பட்டு தனித்தனியாக போட்டியிட்டன. ஆட்சியை பறிகொடுத்த அந்த தேர்தலில் கூட காங்கிரசுக்கு 42 இடங்களும், தேசியவாத காங்கிரசுக்கு 41 இடங்களும் கிடைத்தன.

காரணம் என்ன?

தேசியவாத காங்கிரசின் இந்த எழுச்சிக்கு சில முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. மராட்டியத்தில் காங்கிரசுக்கு என்று தற்போது பெரிய தலைமை இல்லை. அதே நேரத்தில் தேசியவாத காங்கிரசின் பெரிய அடையாளமாக சரத்பவார் உள்ளார். 78 வயதாகும் சரத்பவார் தனது முதுமையையும் பொருட்படுத்தாது தேர்தலின் போது மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தனது கட்சிக்கு ஆதரவை திரட்டினார்.

ஒரு தேர்தல் பிரசார பொதுக்‌கூட்டத்தில் அவர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். இது தேசியவாத காங்கிரஸ் தொண்டர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை உண்டாக்கியது.

இதுதவிர மராட்டிய மாநில கூட்டுறவு வங்கி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை சரத்பவாரின் பெயரை சேர்த்தது அக்கட்சி தொண்டர்களை உசுப்பேற்றிவிடும் வகையில் அமைந்து விட்டது. காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு இந்த தேர்தல் ஆட்சி அதிகாரத்தை கொடுக்காவிட்டாலும் சரத்பவாரின் உழைப்பு அவரது கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்று கொடுத்து விட்டது என்று கூறினால் மிகையாகாது.

எதிர்க்கட்சி அந்தஸ்து

அதிக இடம் பிடித்து இருப்பதால், காங்கிரசிடம் இருந்த எதிர்க்கட்சி அந்தஸ்தை தேசியவாத காங்கிரஸ் பறிக்கிறது. அதாவது பா.ஜனதா- சிவசேனா கூட்டணி அரசு அமைந்தால், சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறும்.

இது அந்த கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story