சிகிச்சை பூங்கா திறப்பு விழா: மனநலம் பாதித்த குழந்தைகளை ஆதரிக்க வேண்டும் - கலெக்டர் பேச்சு
மனநலம் பாதித்த குழந்தைகளை நாம் ஆதரிக்க வேண்டும் என்று அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த விழாவில் கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.
அடுக்கம்பாறை,
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மனநலம் பாதித்த மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிகிச்சை பூங்கா மற்றும் தனி சிகிச்சை மையம் திறப்பு விழா நடந்தது. கல்லூரி டீன் செல்வி தலைமை தாங்கினார். வேலூர் சுகாதாரத்துறை துணை இயக்குனர் சுரேஷ், மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜவேலு, துணை முதல்வர் முகமதுகனி, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் நலத்துறை தலைவர் தேரணிராஜன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு, சிகிச்சை பூங்காவை திறந்து வைத்து பேசியதாவது:-
2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது உலக மக்கள் தொகை 21 மில்லியனில், 2 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகளாக இருந்தனர். ஆனால் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது உலக மக்கள் தொகை 26 மில்லியனாக உயர்ந்தது. இதில் 2.6 சதவீதம் பேர் மட்டுமே மாற்றுத்திறனாளியாக இருந்தது தெரிய வந்தது.
இதில் மராட்டியம், ஒடிசா, ஜம்மு உள்ளிட்ட மாநிலங்களில் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. பிறந்த குழந்தை முதல், 5 வயது வரையான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து, அவர்களை குணமடையச் செய்யலாம்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில், மனநலம் பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க ராட்டினம், ஊஞ்சல், சறுக்குதல், வண்ண மீன்கள், மூலிகைச்செடிகள் உள்ளிட்டவைகளுடன் இந்த சிகிச்சை பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையம் மற்றும் பூங்கா, இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிதியுதவியின் மூலம் ரூ.21 லட்சம் மற்றும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் 1983-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு ரூ.2 லட்சத்திலும் கட்டப்பட்டுள்ளது. இந்த பூங்கா மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை மற்றும் திட்டம் அதிகம் உள்ளது. ஆனால் அதுபற்றி அவர்களுக்கு சரியாக தெரியவில்லை. மாவட்டத்தில் மாற்றுத்திறன் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டும். அது வந்தவுடன் அனைவருக்கும் அரசின் சலுகைகள் கிடைக்கும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் பாதித்த குழந்தைகளை தனிமைப்படுத்தக்கூடாது. அவர்களை புறக்கணிப்பதும் கொடுமையான விஷயம். அவர்களை நாம் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் கலெக்டர் சண்முகசுந்தரம், நிருபர்களிடம் கூறுகையில், டெங்கு கொசுப்புழுக்கள் காணப்படும் நிறுவனங்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொசு, கொசுப்புழுக்கள் காணப்பட்ட வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள், பள்ளிகளின் உரிமையாளர்களுக்கு இதுவரை ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மாவட்டம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு கொசு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது, என்றார்.
Related Tags :
Next Story