பெங்களூருவில் பயங்கரம் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பெங்களூருவில் ஆட்டோ டிரைவரை மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலை மறைவான மர்மநபர் களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு,
பெங்களூருவில் ஆட்டோ டிரைவரை மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலை மறைவான மர்மநபர் களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
ஆட்டோ டிரைவர் கொலை
பெங்களூரு காமாட்சி பாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சுங்கதகட்டேயில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் மனோஜ்குமார் (வயது 23). இவரது சொந்த ஊர் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி ஆகும். டிரைவரான மனோஜ்குமார், சுங்கதகட்டேயில் தங்கி இருந்து ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் நண்பர்களை பார்த்து விட்டு ஹெக்கனஹள்ளி மெயின் ரோட்டில் செல்போனில் பேசியபடி மனோஜ்குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மர்மநபர்கள் சிலர் ஆட்டோவில் வந்தனர்.
அந்த மர்மநபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனோஜ்குமாரை சரமாரியாக வெட்டினார்கள். இதில், பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். பின்னர் மனோஜ்குமார் துடிதுடித்து பரிதாபமாக இறந்துவிட்டார். உடனே அங்கிருந்து மர்மநபர்கள் ஆட்டோவில் ஏறி சென்று விட்டார்கள். மனோஜ்குமார் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதுபற்றி தகவல் அறிந்ததும் காமாட்சி பாளையா போலீசார் விரைந்து சென்று மனோஜ்குமாரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். தகவல் கிடைத்ததும் உயர் போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மனோஜ்குமாரை கொலை செய்த மர்மநபர்கள் யார்? என்ன காரணத்திற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக மனோஜ்குமாரை, அவரது நண்பர்களே கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து காமாட்சி பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story