தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்து போடக்கூடாது மத்திய அரசுக்கு வீரப்பமொய்லி வலியுறுத்தல்


தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்து போடக்கூடாது மத்திய அரசுக்கு வீரப்பமொய்லி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 Oct 2019 4:00 AM IST (Updated: 25 Oct 2019 11:23 PM IST)
t-max-icont-min-icon

தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்து போடக்கூடாது என்று மத்திய அரசை வீரப்பமொய்லி வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு, 

தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்து போடக்கூடாது என்று மத்திய அரசை வீரப்பமொய்லி வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் மத்திய மந்திரி வீரப்பமொய்லி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பால் பண்ணை தொழில்

இந்தியாவை விட நியூசிலாந்து பால் பண்ணை தொழிலில் முன்னிலையில் உள்ளது. அங்கு ஒரு பசு மாட்டில் இருந்து தினமும் 13 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. அது இந்தியாவில் 3.5 லிட்டராக உள்ளது. அந்த நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தியாவைவிட பல மடங்கு அதிகம். பால் பண்ணை தொழிலை நம்பி இந்தியாவில் 10 கோடி பேர் வாழ்கிறார்கள்.

விவசாயம் மற்றும் கால்நடைத்துறையில் 49 சதவீத வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. நாட்டில் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. தொழில் வளர்ச்சி மோசமான நிலையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் விவசாயம் மற்றும் பால் பண்ணை மட்டுமே மக்களை காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சாதக-பாதகங்கள்

பண மதிப்பிழப்பு, சரக்கு-சேவை வரி திட்டத்தால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. இந்த நிலையில் தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா இணைவது, நாட்டின் பொருளாதாரத்தை பள்ளத்தில் தள்ளிவிடுவதற்கு சமம் ஆகும். எந்த ஒரு முக்கிய முடிவு எடுப்பதற்கு முன்பு அதுபற்றி சாதக-பாதகங்கள் குறித்து ஆழமாக விவாதிக்க வேண்டும். அவசரத்தில் முடிவு எடுப்பதால், பாதிப்புகள் தான் ஏற்படும்.

உலக அளவில் போட்டி போடும் அளவுக்கு இந்தியா இன்னும் வளரவில்லை. நாட்டின் விவசாயம் மற்றும் பால் பண்ணை தொழிலில் நாம் பின்னோக்கியே இருக்கிறோம். இந்த நிலையில் முன்னேறிய நாடுகளின் பால் பொருட்களை இறக்குமதி செய்தால், நமது விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அவர்களின் வயிற்றில் அடிப்பது போல் ஆகிவிடும்.

காங்கிரசுக்கு நம்பிக்கை

உலக அளவில் போட்டி போடும் அளவுக்கு இந்தியா வளரும் வரை, தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்து போடக்கூடாது. மராட்டியம், அரியானா சட்டசபை தேர்தல் மற்றும் பிற மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டியத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தீவிர பிரசாரம் செய்தனர். ஆயினும், அக்கட்சி தனிப்பெரும்பான்மையை பெற முடியவில்லை. காங்கிரசில் சோனியா காந்தியோ அல்லது ராகுல் காந்தியோ யாரும் பிரசாரம் செய்யவில்லை. ஒருவேளை எங்கள் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்திருந்தால், மராட்டியத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்திருக்கும்.

இவ்வாறு வீரப்பமொய்லி கூறினார்.

Next Story