தூத்துக்குடியில் ‘பிகில்’ படத்துக்கு போலி டிக்கெட் விற்பனை; 4 பேர் கைது
தூத்துக்குடியில் ‘பிகில்’ படத்திற்கு போலி டிக்கெட்கள் விற்பனை செய்த 2 பேர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் ‘பிகில்’ படத்திற்கு போலி டிக்கெட்கள் விற்பனை செய்த 2 பேர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.27 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
‘பிகில்’ திரைப்படம்
தூத்துக்குடியில் நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படம் 2 சினிமா தியேட்டர்களில் திரையிடப்பட்டு உள்ளது. நேற்று காலையில் சிறப்பு காட்சிகள் நடந்தன. அப்போது அனுமதிக்கப்பட்ட டிக்கெட்டுகளை விட கூடுதலாக ரசிகர்கள் வந்தனர். இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அசல் டிக்கெட்டுடன் வந்தவர்கள் படம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதால், அவர்கள் தியேட்டர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போலி டிக்கெட்
இதுகுறித்த தகவலின்பேரில் தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்த தூத்துக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 35), டூவிபுரத்தை சேர்ந்த மோகன் பாபு (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.27 ஆயிரம் மற்றும் 14 போலி டிக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் 2 பேரும் நெல்லையில் உள்ள ஒரு பிரிண்டிங் நிறுவனத்தில் போலி டிக்கெட்களை அச்சடித்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நிறுவன உரிமையாளர் முத்துராஜ், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் உமர் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story