“தூத்துக்குடி மக்கள் மாசற்ற தீபாவளியை கொண்டாடுங்கள்” கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள்
தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் மாசற்ற தீபாவளியை கொண்டாட மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் மாசற்ற தீபாவளியை கொண்டாட மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-
தீபாவளி திருநாள்
தீபாவளி திருநாள் மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் திருநாட்களில் ஒன்றாகும். இந்த நாளில் விளக்குகளை வரிசையாக வைத்து இறைவனை வழிபடுவது மரபு. இந்த நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகாலையில் குளித்துவிட்டு இறைவனை விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரித்து வணங்குவார்கள். தொடர்ந்து பட்டாசு வெடித்து மகிழ்வார்கள். இத்தகைய பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை மாசுபடுகிறது. பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் அதிக அளவிலான சத்தம் சிறுவர்கள், பெரியவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் அளவிலும் மனதளவிலும் பாதிப்பு ஏற்படும்.
நேரம் நிர்ணயம்
இந்த நிலையில் கடந்த ஆண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகள் உற்பத்தி செய்ய வேண்டும். வரும் காலத்தில் பசுமை பட்டாசுகள் உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மேலும் தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரைக்கும், இரவு 7 மணி முதல் 8 மணி வரைக்கும் பட்டாசுகள் வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கப்பட்டது. இந்த தீபாவளி பண்டிகையன்றும் கடந்த ஆண்டை போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
மாசற்ற தீபாவளி
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் பேணி காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பொது மக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசு படுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளில் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்றுகூடி கூட்டாக பட்டாசு வெடிக்கலாம். அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்க கூடாது. பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுங்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story