தூத்துக்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் இன்று முதல் பணியை புறக்கணிக்க முடிவு
தூத்துக்குடியில் டாக்டர்கள் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் டாக்டர்கள் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இன்று(சனிக்கிழமை) முதல் பணியை புறக்கணிக்க டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.
கோரிக்கைகள்
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களின் பணியிடங்களை உயர்த்த வேண்டும். அரசு பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களை கலந்தாய்வு மூலம் பணியமர்த்த வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவில்லை. வழக்கம் போல் பணிக்கு வந்தனர். இதனால் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. மேலும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடியில் அரசு டாக்டர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தூத்துக்குடி ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜா விக்னேஷ், பொருளாளர் செந்தில் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இன்று பணி புறக்கணிப்பு
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான டாக்டர்கள் கலந்து கொண்டனர். மேலும் முதல் நாளில் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும், இன்று (சனிக்கிழமை) முதல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story