வத்தலக்குண்டு அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்த வழக்கில் பிரபல திருடன் கைது; 50 பவுன் நகைகள் மீட்பு


வத்தலக்குண்டு அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்த வழக்கில் பிரபல திருடன் கைது; 50 பவுன் நகைகள் மீட்பு
x
தினத்தந்தி 26 Oct 2019 4:30 AM IST (Updated: 26 Oct 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

வத்தலக்குண்டு அருகே பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பிரபல திருடனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

வத்தலக்குண்டு,

வத்தலக்குண்டு அருகே உள்ள கரட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் மணி. விவசாயி. இவரது மனைவி வசந்தி. இவர்கள் 2 பேரும் கடந்த 20-ந்தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு வீட்டின் கதவு தட்டப்பட்டது.

எனவே வசந்தி கதவை திறந்து பார்த்தார். அப்போது வெளியே நின்றிருந்த 2 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் வசந்தி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து விருவீடு போலீஸ் நிலையத்தில் மணி புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து நகைபறித்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவந்தனர். அதையொட்டி வசந்தியிடம் நகை பறித்த கமுதி அருகே உள்ள கண்ணார்பட்டியை சேர்ந்த சண்முகம் (வயது 45) என்ற பிரபல திருடனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி உள்பட பல இடங்களில் நகை பறிப்பு மற்றும் வீடுபுகுந்து திருடுவது போன்றவற்றில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சண்முகம் மறைத்து வைத்திருந்த 50 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் சண்முகத்தின் கூட்டாளி திண்டுக்கல்லை சேர்ந்த குமாரை தேடி வருகின்றனர்.

Next Story