தீபாவளி பரிசாக 3 நாட்களுக்கு மதுக்கடைகளை தமிழக அரசு மூட வேண்டும் - நாமக்கல்லில் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
தமிழகத்தில் பொதுமக்களுக்கு தீபாவளி பரிசாக 3 நாட்களுக்கு மதுக் கடைகளை அரசு மூட வேண்டும் என நாமக்கல்லில் முன்னாள் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.
நாமக்கல்,
நாமக்கல்லில், முன்னாள் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாராட்டியம் மற்றும் அரியானா மாநிலங்களில் பா.ஜ.க. மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க. 2 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணி தொடர்ந்து தமிழகத்தில் வெற்றி பெறக்கூடிய நிலை அமையும்.
அந்த வெற்றியை கொண்டாடும் வகையில் தமிழக மக்களுக்கு தீபாவளி பரிசாகவும், எதிர்கால முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதலாகவும் 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட வேண்டும். மதுவற்ற தீபாவளியை தமிழர்கள் கொண்டாடும் வகையில் தமிழக அரசு இந்த ஆணையை பிறப்பிக்க வேண்டும்.
காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் 15 நாட்கள் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. காந்தியடிகளின் அடிப்படை கொள்கைகளான தூய்மை இந்தியா, பெண்கள் பாதுகாப்பு, மது ஒழிப்பு, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு, நீர்நிலை பாதுகாப்பு, சுதேசி பொருட்களின் பயன்பாடு, தீண்டாமை ஒழித்தல் உள்பட பல்வேறு விஷயங்களை இளைஞர்களுக்கு கொண்டுசெல்லும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியால் அந்த யாத்திரை திட்டமிடப் பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் யாத்திரையில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தொகுதி மக்களை 3½ ஆண்டுகள் புறக்கணித்ததால்தான் காங்கிரஸ் கட்சி இடைத்தேர்தலில் தோற்றுள்ளது. இந்த தேர்தல் அரசியல்வாதிகளுக்கு பாடமாக அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள எந்த கட்சியின் தலைவர்களும், தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் தமிழை பிரதமர் நரேந்திர மோடி போல் பெருமைப்படுத்தியது இல்லை. அறிஞர்கள் நிறைய படைப்புகள் செய்துள்ளனர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தமிழை உலக அளவில் எடுத்து சென்று பெருமைப்படுத்தி உள்ளார்.
இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.
Related Tags :
Next Story