2021-ம் ஆண்டு தேர்தலுக்குள் நாமக்கல்லில் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் - அமைச்சர் தங்கமணி பேட்டி
2021-ம் ஆண்டு தேர்தலுக்குள் நாமக்கல்லில் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல்,
தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பருவமழை பெய்து வருவதை முன்னிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு கூட்டம் நடத்தி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுரைகளை வழங்கி உள்ளார். மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லவேண்டும் என கூறி உள்ளார்.
மழைநீர் குளங்களுக்கு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு 6 மருத்துவ கல்லூரிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்று தந்துள்ளார். அதில் நாமக்கல்லுக்கு ஒன்று வர உள்ளது. அதற்காக நாமக்கல் கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் 24 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் அங்கு பணிகள் தொடங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் எடுத்து வருகிறார். வருகிற 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்குள் நாமக்கல்லில் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி படிப்படியாக மதுக்கடைகளை குறைப்போம். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி, வருகிற 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாக உள்ளது. மீண்டும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.
அப்போது சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா, கலெக்டர் மெகராஜ், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story