நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. மீதான வெறுப்பால் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது - ஜி.கே.மணி பேட்டி


நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. மீதான வெறுப்பால் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது -  ஜி.கே.மணி பேட்டி
x
தினத்தந்தி 25 Oct 2019 11:15 PM GMT (Updated: 25 Oct 2019 8:02 PM GMT)

‘நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. மீதான வெறுப்பால் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது’ என்று சேலத்தில் ஜி.கே.மணி தெரிவித்தார்.

சேலம், 

சேலம் மாநகர மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் வி.பன்னீர்செல்வம் இல்ல திருமண விழா சேலத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். முன்னதாக அவர், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. இமாலய வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்றுள்ள நிலையில் இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. அ.தி.மு.க., பா.ம.க. மீது தி.மு.க.வினர் தொடர்ந்து அவதூறு பரப்பி வந்தனர். இதனால் தி.மு.க. மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டதால் 2 தொகுதி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. இந்த சாதனை வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சமி நிலம் தொடர்பான பிரச்சினையில் பா.ம.க.வை தி.மு.க. தவறாக விமர்சனம் செய்தது. தற்போது பஞ்சமி நிலம் தொடர்பான பிரச்சினையில் உண்மை நிலவரத்தை தெரிவிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று அரசிடம் பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

நீட் தேர்வால் ஏழை, நடுத்தர மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே நீட் தேர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில துணை பொதுச்செயலாளர் அருள் மற்றும் நிர்வாகிகள் கதிர்.ராசரத்தினம், சாம்ராஜ், சத்திரிய சேகர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story