நாகையில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி - கலெக்டர் பிரவீன் நாயர் தொடங்கி வைத்தார்


நாகையில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி - கலெக்டர் பிரவீன் நாயர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 Oct 2019 10:30 PM GMT (Updated: 25 Oct 2019 8:02 PM GMT)

நாகையில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை கலெக்டர் பிரவீன் நாயர் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம்,

பள்ளி கல்வித்துறை சார்பில் நாகை மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி மற்றும் கணித கருத்தரங்கம் தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேசன் வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கினார். மயிலாடுதுறை கல்வி மாவட்ட கல்வி அலுவலர் குமரன், சீர்காழி கல்வி மாவட்ட கல்வி அலுவலர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலெக்டர் பிரவீன் நாயர் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அறிவியலை நாம் தினந்தோறும் பயன்படுத்துகிறோம். ஆனால் அது குறித்த விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. அதை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு செயலையும் ஏன், எதற்கு, எங்கே என்று கேள்விகள் கேட்க வேண்டும். அப்படி கேட்டால் நம்மிடம் அறிவியல் வளரும். அறிவியல் ஒரு கத்தியின் முனை போன்றது. கத்தி ஒரு பழத்தை வெட்டவும் பயன்படுகிறது. ஒரு நபரை தாக்கவும் பயன்படுகிறது. அது போன்றது தான் அறிவியல்.

நாம் பயன்படுத்தும் செல்போன் அணுகுண்டு போன்றது. செல்போனை அறிவியல் ரீதியாக பயன்படுத்தி நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். அதே நேரத்தில் செல்போனை பயன்படுத்தி வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்றவற்றை பார்த்து நேரத்தையும் வீணடிக்கலாம். மாணவர்கள் தினந்தோறும் ஏதாவது ஒன்றை கற்க வேண்டும். ஆர்வம் என்ற விளக்கை ஏற்றினால் வாழ்வில் வளமாக வாழலாம். எனவே மாணவர்கள் கேள்விகள் கேட்க தயக்கம் காட்ட கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் 150 பள்ளிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் காட்சிப்பொருட்களை படைத்திருந்தனர். முடிவில் தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வி நன்றி கூறினார்.

Next Story