முசிறி புறவழிச்சாலையில் தடுப்புச்சுவர் மீது மோதல்: ஏற்றுமதிக்காக உயர்ரக துணிகளை ஏற்றி வந்த லாரி தீப்பிடித்தது
ஏற்றுமதிக்காக உயர்ரக துணிகளை ஏற்றி வந்த லாரி, முசிறி புறவழிச்சாலையில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதியதில் தீப்பிடித்தது. இதில் பாதி எரிந்த துணிகளை பொதுமக்கள் அள்ளிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
முசிறி,
திருச்சி மாவட்டம், முசிறி புறவழிச்சாலையை அகலப்படுத்தும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முசிறி பஸ் நிலையம் முதல் பெரியார் காவிரி பாலம் வரை சாலையின் நடுவே தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை மூலம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் முசிறி புற வழிச்சாலையில் சந்தபாளையம் பிரிவுவரை, தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கரூரில் இருந்து, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஓட்டலுக்கு தேவையான உயர்ரக துணி வகைகளை ஏற்றிக்கொண்டு கனரக லாரி ஒன்று சென்னை துறைமுகத்திற்கு செல்ல புறப்பட்டு வந்தது. அந்த லாரி குளித்தலை வழியாக முசிறி புறவழிச்சாலையில் வந்தபோது சந்தபாளையம் பிரிவுரோடு அருகே சாலையின் நடுவே புதிதாக அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர் மீது மோதியது. இதில் தடுப்புச்சுவரின் மீது லாரியின் முன்பகுதி ஏறி சிறிது தூரம் சென்றது. இதனால் உராய்வின் காரணமாக டீசல் டேங்க் தீப்பிடித்து, லாரியின் பின்பகுதியில் தீ பரவியது.
இதைக்கண்ட அப்பகுதியினர், இது குறித்து முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது லாரியில் எரிந்து கொண்டிருந்த துணிகளை, சாலையில் தூக்கிப்போட்டு, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மேலும் லாரியில் எரிந்த தீயையும் அணைத்தனர். இருப்பினும் லாரியின் பின் பகுதி மற்றும் துணிகள் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் அங்கிருந்த பொதுமக்கள் சிலர், லாரியில் பாதி எரிந்தநிலையில் கிடந்த துணிகளை அள்ளிச்சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து லாரி டிரைவர் துரைசாமி, முசிறி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story