நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றனர்
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சேலம்,
தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி நாராயணனும், விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்செல்வனும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதைத்தொடர்ந்து முத்தமிழ்செல்வன், ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகிய 2 பேரும் நேற்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காண்பித்து அவரிடம் வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம், ராஜலட்சுமி, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
இதையடுத்து ரெட்டியார்பட்டி நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இவர்களின் பிரசார வியூகம், தொண்டர்களின் ஓயாத உழைப்பு, அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரித்த முறை ஆகியவற்றால் 33 ஆயிரத்து 455 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்.
தொகுதி மக்கள் ஆட்சியின் மீது வைத்துள்ள நம்பிக்கை, முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் மீது வைத்து இருக்கின்ற நம்பிக்கை, அ.தி.மு.க. மீது வெறுப்பு இல்லாமல் விருப்பத்தோடு வாக்களித்து இருக்கின்றனர். நிச்சயமாக வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் ஜெயலலிதாவின் ஆட்சி அமையும். அதிகப்படியான இடத்தில் வெற்றி பெறுவதுடன், 2021-ம் ஆண்டிலும் அ.தி.மு.க. ஆட்சி நடக்கும் என்பதை நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை இடைத்தேர்தல்கள் வெற்றி எடுத்து காட்டுகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story