அம்மா இருசக்கர வாகன திட்டம்: பணிபுரியும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் பிரபாகர் தகவல்


அம்மா இருசக்கர வாகன திட்டம்: பணிபுரியும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் பிரபாகர் தகவல்
x
தினத்தந்தி 25 Oct 2019 10:30 PM GMT (Updated: 25 Oct 2019 8:47 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரியும் பெண்கள் அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரியும் பெண்கள், தங்கள் பணியிடங்களுக்கும் பிற வேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையில் இரு சக்கர வாகனம் வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கும் அம்மா இருசக்கர வாகன திட்டம், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2019-2020-ம் ஆண்டிற்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 18 முதல் 40 வயதிற்குட்பட்ட இருசக்கர வாகன ஓட்டுனர் அல்லது பழகுனர் உரிமம் உள்ள ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு கீழ் உள்ள பெண்கள், அமைப்புசார் மற்றும் அமைப்பு சாரா நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், கடைகள், அரசு நிதி உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சமூக அடிப்படை நிறுவனங்கள், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு, நிறுவனங்களில் சுயமாக சிறு தொழில் செய்யும் பெண்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், மாவட்ட மக்கள் கற்றல் மையம் ஆகிய நிறுவனங்களில் தொகுப்பூதியம், தினக்கூலி, ஒப்பந்த ஊதிய அடிப்படையில் பணிபுரிந்து வரும் பெண்கள், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேற்படி திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும் அனைத்து பேரூராட்சிகளிலும் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. எனவே, தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சம்பந்தப்பட அலுவலகங்களில் வழங்கிட வேண்டும். அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்கு 2018-2019-ம் ஆண்டிற்கு 2,633 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதில், மாவட்ட தேர்வு குழு மூலம் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

உத்தரவு பெற்ற பயனாளிகள் பலர் இதுவரை வாகனம் வாங்கி மானியம் பெற விண்ணப்பம் வழங்காமல் உள்ளனர். மானியம் பெற விண்ணப்பம் வழங்காத பயனாளிகள் உரிய ஆவணங்களை பெற்று சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் வருகிற 31-ந் தேதிக்குள் நேரில் சமர்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story