ஈச்சம்பாடி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - 6,250 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்
ஈச்சம்பாடி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார். இதன்மூலம் 6,250 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகாவிற்குட்பட்ட ஈச்சம்பாடி அணையின் வலதுபுற கால்வாய் மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், தர்மபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் டி.ஆர்.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு மதகுகளில் தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவினார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, பொதுப்பணித்துறை நீர்வளஆதார அமைப்பு செயற்பொறியாளர் மெய்யழகன், உதவி கலெக்டர் தேன்மொழி, தாசில்தார் கலைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் சிவபிரகாசம், கூட்டுறவு சங்கத்தலைவர் மதிவாணன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஐ.கே.முருகன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொறியாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், ஈச்சம்பாடி அணைக்கட்டின் இடது மற்றும் வலது புற கால்வாய்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி 6,250 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் பாசனத்திற்காக தற்போது தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன்படி 120 நாட்கள் அல்லது ஆற்றில் தண்ணீர் வரத்து இருக்கும் வரை தண்ணீர் திறந்து விடப்படும்.
இதன் மூலம் ஈச்சம்பாடி, அக்ரஹாரம், கெட்டுப்பட்டி, எலவடை, பாளையம், சாமாண்டஅள்ளி, பள்ளிப்பட்டி உள்ளிட்ட 32 கிராமங்கள் பயன்பெறும். விவசாயிகள் பொதுப்பணித்துறையினருடன் ஒத்துழைத்து நீர்மேலாண்மை முறைகளை பின்பற்றி தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
Related Tags :
Next Story