உசிலம்பட்டி அருகே ஷேர் ஆட்டோ- லாரி மோதி கோர விபத்து: பெண்கள் உள்பட 6 பேர் நசுங்கி சாவு 8 பேர் படுகாயம்


உசிலம்பட்டி அருகே ஷேர் ஆட்டோ- லாரி மோதி கோர விபத்து: பெண்கள் உள்பட 6 பேர் நசுங்கி சாவு 8 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 26 Oct 2019 5:15 AM IST (Updated: 26 Oct 2019 3:45 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டி அருகே ஷேர் ஆட்டோ- லாரி மோதிக்கொண்ட விபத்தில் பெண்கள் உள்பட 6 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். சிறுமிகள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கோடாங்கிபட்டியில் ஒரு ஷேர் ஆட்டோ பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவில் பெண்கள், சிறுமிகள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

காராம்பட்டி ஊருணி கரையில் அந்த ஷேர் ஆட்டோ சென்ற போது எதிரே ஒரு லாரி வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் நேருக்குநேராக அந்த லாரியும், ஷேர் ஆட்டோவும் பயங்கரமாக மோதிக்கொண்டன.

மோதிய வேகத்தில் ஷேர் ஆட்டோ நொறுங்கி அந்த ஊருணிக்கு மிக அருகில் தூக்கி வீசிப்பட்டது. இதனால் அந்த ஆட்டோவில் இருந்தவர்கள் இடுபாடுகளுக்குள் நசுங்கி அலறினர்.

இந்த விபத்து குறித்து அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிவந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டார்கள். உடனடியாக எழுமலை போலீசாரும் தகவல் அறிந்து விரைந்து வந்தனர். மேலும் உசிலம்பட்டி கோட்டாட்சியர் சவுந்தர்யா, தாசில்தார் தாமரை, துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா ஆகியோரும் விபத்து நடந்த இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.

ஷேர் ஆட்டோ இடிபாடுகளில் சிக்கி நசுங்கியதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் பெயர் விவரம் வருமாறு:-

1. ஜோதிநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்துலட்சுமி (வயது 55)

2. ஜோதிர்நாயக்கனூரை சேர்ந்த சின்னராஜா மனைவி வாசியம்மாள் (40)

3. கோடாங்கிபட்டியை சேர்ந்த அசோக் (40)

4. தாடையம்பட்டியை சேர்ந்த பால்பாண்டி மனைவி சத்யா (28)

5. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தும்மங்குண்டு பகுதியை சேர்ந்த முருகன் (45)

6. உசிலம்பட்டி கீழடி புதூரை சேர்ந்த குருவம்மாள் (56)

மேலும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய ஆட்டோ டிரைவர் வினோத்(25), நாகஜோதி (29), இவருடைய மகள்கள் சர்மிளா (9), தனுஷா (7) மற்றும் வசந்தா(45), கோடாங்கிபட்டியை சேர்ந்த அய்யர்(48), ஜோதில்நாயக்கனூரைச் சேர்ந்த மாரியம்மாள், பிரவீன்குமார் ஆகிய 8 பேர் மீட்கப்பட்டனர்.

அவர்கள் அனைவருக்கும் முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர், மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்சுகளில் கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து நடந்த பகுதியில் உள்ள ஊருணியில் தற்போது தண்ணீர் நிரம்பி உள்ளது. எனவே விபத்தில் சிக்கிய யாரும் தண்ணீருக்குள் விழுந்தார்களா? என சந்தேகம் எழுந்ததால் தீயணைப்பு வீரர்கள் ஊருணிக்குள் இறங்கி தேடினார்கள். நீண்ட நேரம் தேடும் பணி நடந்தது. ஆனால் யாரும் தண்ணீருக்குள் இருந்து மீட்கப்படவில்லை.

இந்த கோர விபத்து குறித்து எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் தினகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஷேர் ஆட்டோவுடன் மோதிய லாரியின் டிரைவரை போலீசார் தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story