விபத்தில் சிறுமிகள் உயிரை காப்பாற்றிய ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர்களுக்கு மத்திய மந்திரி பாராட்டு


விபத்தில் சிறுமிகள் உயிரை காப்பாற்றிய ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர்களுக்கு மத்திய மந்திரி பாராட்டு
x
தினத்தந்தி 26 Oct 2019 3:55 AM IST (Updated: 26 Oct 2019 3:55 AM IST)
t-max-icont-min-icon

பணியில் இருக்கும் போது சிறப்பாக செயல்பட்ட, ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசாருக்கு மத்திய ரெயில்வே துணை மந்திரி சுரேஷ் அங்காடி பாராட்டு தெரிவித்து விருதுகள் வழங்கினார்.

சென்னை,

ரெயில்வே அமைச்சகம் சார்பில் பெங்களூருவில் ‘குற்ற கையேடு’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பணியில் இருக்கும் போது சிறப்பாக செயல்பட்ட, ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசாருக்கு மத்திய ரெயில்வே துணை மந்திரி சுரேஷ் அங்காடி பாராட்டு தெரிவித்து விருதுகள் வழங்கினார்.

அதன்படி தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட எழும்பூர் ரெயில் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி, ஓடும் ரெயிலில் ஏறமுயன்று தவறி விழுந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 11 வயது சிறுமியை பாதுகாப்பு பணியில் இருந்த எழும்பூர் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீஸ் ஜோஸ், சாதுர்யமாக செயல்பட்டு சிறுமியின் உயிரை காப்பாற்றினார்.

இதேபோல் மாம்பலம் ரெயில் நிலையத்தில் அதே ஜூன் மாதம் 9-ந்தேதி ஓடும் மின்சார ரெயிலில் ஏறமுயன்று தவறி விழுந்த 15 வயது சிறுமியை, பாதுகாப்பு பணியில் இருந்த மாம்பலம் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீஸ் ஜம்புலிங்கம் விரைந்து செயல்பட்டு சிறுமியை காப்பாற்றினார்.

இந்த விபத்துகளில் சிறப்பாக செயல்பட்ட 2 பாதுகாப்புப்படை வீரர்களின் வீரதீர செயலை அன்று ரெயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் பலர் பாராட்டினர். தற்போது பெங்களூருவில் நடந்த விழாவில் மத்திய ரெயில்வே துணை மந்திரி சுரேஷ் அங்காடி இவர்கள் 2 பேருக்கும் பாராட்டு தெரிவித்து விருதுகள் வழங்கினார்.

Next Story