போனசை உயர்த்தி வழங்கக்கோரி கூட்டுறவு சங்க அலுவலகத்தை பால் உற்பத்தியாளர்கள் முற்றுகை


போனசை உயர்த்தி வழங்கக்கோரி கூட்டுறவு சங்க அலுவலகத்தை பால் உற்பத்தியாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 26 Oct 2019 4:15 AM IST (Updated: 26 Oct 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

பாகூர் அருகே போனசை உயர்த்தி வழங்கக்கோரி கூட்டுறவு சங்க அலுவலகத்தை பால் உற்பத்தியாளர்கள் முற்றுகையிட்டனர்.

பாகூர்,

பாகூர் அருகே சோரியாங்குப்பத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் அப்பகுதியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 12 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த சங்கத்திற்கு கடந்த பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை.

எனவே பொதுநிர்வாகி ஒருவரையும், ஊழியர் ஒருவரையும் அரசு நியமித்து உறுப்பினர்களிடம் இருந்து பாலை கொள்முதல் செய்து வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 2 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படு கிறது. இந்த கூட்டுறவு சங்கத்துக்கு பால் ஊற்றும் உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் வழங்கப்படும்.

அதன்படி இந்த ஆண்டும் போனஸ் வழங்க அறிவிக்கப்பட்டது. ஆனால் கூட்டுறவு சங்கத்தின் லாபத்தை குறைத்து கணக்கிட்டு போனஸ் தொகையை குறைத்து வழங்க முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. அதாவது லாபத்தில் 10 சதவீதம் போனசை வழங்கவேண்டும் என்று உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், 7 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த உற்பத்தியாளர்கள் நேற்று காலை கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சங்கத்துக்கு உறுப்பினர்கள் கேன்களில் கொண்டு வந்த சுமார் ஆயிரம் லிட்டர் பாலை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போனசை உயர்த்தி வழங்கவேண்டும், கூட்டுறவு சங்கத்துக்கு தேர்தல் நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதுபற்றி உயர்அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதற்கிடையில் ஒரு சதவீதம் கூடுதலாக போனஸ் வழங்கப்படும் என்று கூட்டுறவு சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story