சட்டசபை தேர்தலில் ருசிகரம் சகோதரர்கள், தந்தை-மகன் வெற்றி


சட்டசபை தேர்தலில் ருசிகரம் சகோதரர்கள், தந்தை-மகன் வெற்றி
x
தினத்தந்தி 26 Oct 2019 5:00 AM IST (Updated: 26 Oct 2019 4:36 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய சட்டசபை தேர்தலில் சகோதரர்கள் மற்றும் தந்தை-மகன் வெற்றி கனியை ருசித்து உள்ளனர்.

மும்பை, 

மராட்டிய சட்டசபை தேர்தலில் சகோதரர்கள் மற்றும் தந்தை-மகன் வெற்றி கனியை ருசித்து உள்ளனர்.

சகோதரர்கள்

மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி ஆட்சியை பிடிக்க உள்ள நிலையில், இதில் சில ருசிகரமான நிகழ்வுகளும் நடந்து உள்ளது. அதன்படி இரு ஜோடி சகோதரர்கள் மற்றும் தந்தை- மகன் என தேர்தலில் வெற்றி கனியை பறித்தனர்.

இதில் குறிப்பாக மறைந்த மராட்டிய முதல்-மந்திரி விலாஷ் ராவ் தேஷ்முக்கின் மகன்கள் அமித் தேஷ்முக் லாத்தூர் நகர்ப்புற தொகுதியிலும், தீரஜ் தேஷ்முக் லாத்தூர் ரூரல் தொகுதியிலும் வெற்றி கண்டனர். இருவரும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர்கள்.

இதில் தொடர்ந்து 3-வது தடவை அமித் தேஷ்முக் வெற்றிகண்ட நிலையில், அவரது தம்பி தீரஜ் தேஷ்முக் முதல் தடவை வெற்றியிலேயே 1 லட்சத்து 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தை பெற்றுள்ளார். இவர்கள் நடிகை ஜெனிலியாவின் கணவரான ரித்தேஷ் தேஷ்முக்கின் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு சகோதரர்கள்

இதேபோல சோலாப்பூர் மாவட்டத்தில் மாதா தொகுதியில் பபன் ஷிண்டேயும், கர்மாலா தொகுதியில் அவரது தம்பி சஞ்சயும் வெற்றி பெற்று உள்ளனர்.

இதில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பபன் ஷிண்டே சிவசேனா வேட்பாளரை வீழ்த்தினார். தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்ட சஞ்சய், சிவசேனா போட்டி வேட்பாளரை தோற்கடித்து வெற்றி கண்டு உள்ளார்.

தந்தை-மகன்

இதுதவிர பால்கர் மாவட்டம் வசாய் தொகுதியில் பகுஜன் விகாஸ் அகாடி வேட்பாளர் ஹித்தேந்திரா தாக்குர் மற்றும் நாலச்சோப்ரா தொகுதியில் அதே கட்சி சார்பில் போட்டியிட்ட அவரது மகன் கிருஷ்டி ஹித்தேந்திரா தாக்குர் வெற்றி வாகை சூடினார்கள்.

இதன் மூலம் இரு ஜோடி சகோதரர்கள் மற்றும் தந்தை- மகன் மராட்டிய சட்டசபையை அலங்கரிக்க உள்ளனர்.

Next Story