மணப்பாறை அருகே பரபரப்பு சம்பவம்: ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை - 30 அடி ஆழத்தில் சிக்கி தவிப்பு; மீட்பு பணி தீவிரம்


மணப்பாறை அருகே பரபரப்பு சம்பவம்: ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை - 30 அடி ஆழத்தில் சிக்கி தவிப்பு; மீட்பு பணி தீவிரம்
x
தினத்தந்தி 26 Oct 2019 5:13 AM IST (Updated: 26 Oct 2019 5:13 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை, 30 அடி ஆழத்தில் சிக்கி தவிக்கிறது. அந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பரபரப்பான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

மணப்பாறை, 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ. கட்டிட தொழிலாளியான இவர் வீட்டின் அருகே விவசாயமும் செய்து வந்தார். இவருடைய மனைவி கலாமேரி. இவர்களுக்கு சுர்ஜித் வில்சன் (வயது 2) என்ற மகன் உள்ளான். பிரிட்டோ தனது வீட்டு உபயோகத்திற்கான தண்ணீர் தேவைக்காக, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் அருகே ஆழ்துளை கிணறு அமைத்திருந்தார். சுமார் 400 அடி ஆழத்திற்கு அந்த ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஒரு ஆண்டு வரை அந்த ஆழ்துளை கிணறு பயன்பாட்டில் இருந்தது. பின்னர் தண்ணீர் இல்லாத நிலையில், அந்த ஆழ்துளை கிணறு பயன்பாடின்றி இருந்தது.

இதனால் ஆழ்துளை கிணற்றை மூடும் வகையில், மேல்மட்டம் வரை மண்ணை கொட்டியுள்ளனர். தற்போது அந்த பகுதியில் சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் மழையும் பெய்து வருகிறது. இதனால் ஆழ்துளை கிணற்றை மூடியிருந்த மண் சுமார் 30 அடி ஆழம் வரை கீழே இறங்கியதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று பிரிட்டோ வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் கலாமேரி, சுர்ஜித்வில்சனுடன் இருந்தார். நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் சுர்ஜித்வில்சன் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அவன் சோளம் சாகுபடி செய்யப்பட்ட பகுதியில் நடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். இதில் மண்ணில் உராய்ந்தபடி சென்று அடிப்பகுதியில் சிக்கினான்.

இதைக்கண்ட கலாமேரி அலறியடித்துக்கொண்டு அங்கு ஓடிச்சென்றார். குழந்தை அடிப்பகுதியில் சிக்கியிருப்பதை கண்டு அவர் சத்தம்போட்டார். இதனால் அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து பார்த்தனர். மேலும் உடனடியாக இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் பிரிட்டோவுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வேலைக்கு சென்ற இடத்தில் இருந்து, பிரிட்டோ பதறியடித்துக்கொண்டு அங்கு வந்தார்.

மேலும் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு குத்தாலிங்கம் மற்றும் போலீசார், மணப்பாறை மற்றும் திருச்சியில் இருந்து தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து பார்த்து, ஆழ்துளை கிணற்றில் சிக்கி தவிக்கும் குழந்தையை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். முதலில் ஆழ்துளை கிணற்றுக்குள் டார்ச் லைட்டை அடித்து குழந்தையின் நிலையை பார்வையிட்டனர். வருவாய்த்துறையினரும் அங்கு வந்தனர். மிகவும் குறுகலான அந்த ஆழ்துளை கிணற்றில், ஆட்கள் யாரும் இறங்க முடியாத நிலையில், கிணற்றின் அருகே குழிதோண்டி குழந்தையை மீட்க முடிவு செய்தனர்.

அதன்படி அங்கு 4 பொக்லைன் எந்திரங்கள் உள்ளிட்ட 5 எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, ஆழ்துளை கிணற்றின் அருகே குழிதோண்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. அந்த எந்திரங்களில் உள்ள விளக்குகளின் வெளிச்சத்தில் அந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் அதிக சக்தி கொண்ட மின்விளக்குகள் மூலம் அப்பகுதியில் வெளிச்சம் ஏற்படுத்தப்பட்டது.


இதற்கிடையே அங்கு 108 ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. ஆழ்துளை கிணற்றின் அடிப்பகுதியில் சிக்கியுள்ளதால், குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க ஆழ்துளை கிணற்றுக்குள் சிறிய டியூப் மூலம் ஆக்சிஜன் செலுத்தும் பணியில் மருத்துவக்குழுவினர் ஈடுபட்டனர். மேலும் அந்த குழிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தி, குழந்தையை கண்காணித்தனர்.

சம்பவ இடத்திற்கு அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டிநடராஜன், வளர்மதி, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், ஸ்ரீரங்கம் உதவி கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார், மணப்பாறை தாசில்தார் தமிழ்கனி உள்ளிட்டோரும் அங்கு வந்து பார்வையிட்டு, குழந்தையை மீட்பதற்கான ஆலோசனைகளை வழங்கி பணிகளை முடுக்கி விட்டனர்.


மணப்பாறை அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் முத்துகார்த்திகேயன் தலைமையிலான குழுவினர், ஆழ்துளை கிணற்றில் உள்ள குழந்தைக்கு தொடர்ந்து ஆக்சிஜன் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர். ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவாகும் காட்சிகளை டி.வி.யில் பார்வையிட்டு, குழந்தையின் நிலையை கண்காணித்து வருகின்றனர். எந்திரங்கள் மூலம் இரவு 8.15 மணியளவில் சுமார் 17 அடி வரை குழி தோண்டப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு கீழே பாறை இருந்ததால், குழிதோண்ட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து, ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் நிபுணர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் இரவு 8.30 மணியளவில் அங்கு வந்தனர். அவர்கள் தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோருடன் சேர்ந்து சுர்ஜித் வில்சனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மணிகண்டன் கண்டுபிடித்துள்ள கருவி மூலம், குழந்தையை மீட்கும் பணி நடைபெற்றது. ஆனால் அந்த கருவி மூலம் மீட்பு பணியை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. இதையடுத்து கணினியால் இயங்கக்கூடிய சுருக்கு கயிறுகள் மூலம் மீட்பு பணி தொடங்கியது. இரவு 11 மணிக்கு மேலான நிலையிலும், அந்த பணி தொடர்ந்து நடைபெற்றது. குழாய்களில் கயிறுகளை விட்டு, குழாய்களை பிணைத்து ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்கி, குழந்தையை மீட்க முயன்றனர்.

ஆனாலும் சிறுவன் கைகளில் சரியாக கயிற்றை பிணைக்க முடியாததால், மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் மீட்பு பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. மீண்டும், மீண்டும் கயிறுகளை ஆழ்துளை கிணற்றில் இறக்கி குழந்தையை மீட்க முயன்றும் முடியவில்லை. 3 முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், பலனளிக்கவில்லை.

நள்ளிரவு 12 மணியளவில் மற்றொரு குழுவினர் அங்கு வந்து, இரும்பு குழாய்கள் மூலம் குழந்தையை மீட்கும் முயற்சியை மேற்கொண்டனர். நள்ளிரவு 1 மணியை தாண்டியும், குழந்தையை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்றது. இதற்கிடையே குழந்தையின் தாய், கலாமேரியை குழந்தையுடன் பேச வைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story