நெல்லைக்கு 7 மணி நேரம் தாமதமாக வந்தது: அதிவிரைவு ரெயிலை மறித்து பயணிகள் போராட்டம்


நெல்லைக்கு 7 மணி நேரம் தாமதமாக வந்தது: அதிவிரைவு ரெயிலை மறித்து பயணிகள் போராட்டம்
x
தினத்தந்தி 27 Oct 2019 4:15 AM IST (Updated: 27 Oct 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

நெல்லைக்கு 7 மணி நேரம் தாமதமாக வந்த அதிவிரைவு ரெயிலை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை, 

சென்னையில் இருந்து நெல்லைக்கு தினமும் இரவு நெல்லை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று முன்தினம் இரவு 8.10 மணிக்கு, வழக்கம் போல் சென்னையில் இருந்து புறப்பட்டது. தீபாவளி பண்டிகை நேரம் என்பதால், அந்த ரெயிலில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அந்த ரெயிலில் பயணித்தனர். முன்பதிவு டிக்கெட் கிடைக்காதவர்கள் ரெயிலில் முன்பும், பின்பும் இணைக்கப்பட்டுள்ள பொதுப்பெட்டிகளில் படிக்கட்டுகளில் அமர்ந்தபடி வந்தனர்.

இதற்கிடையே விழுப்புரம் அருகே ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயிலில் பின்னால் இணைக்கப்பட்டு இருந்த ஒரு பொது பெட்டியின் சக்கரம் சரியாக இயங்கவில்லை. மேலும் முன்னால் உள்ள பெட்டியுடன் இணைக்கும் பகுதியும் சரியாக பொருந்தவில்லை. எனவே, ரெயிலை நிறுத்தி பொதுப்பெட்டியில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்ய முயன்றனர்.

எனினும், கோளாறை முழுமையாக சரிசெய்ய முடியவில்லை. எனவே அதிவிரைவு ரெயில், பயணிகள் ரெயிலை விட மிகவும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டது. மேலும் அந்த ரெயிலுக்கு பின்னால் வந்த ரெயில்களுக்கு வழிவிட்டபடி, தாமதமாக வந்தது. இந்த நிலையில் அந்த ரெயில் நேற்று காலை திருச்சி ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

அங்கும் கோளாறை சரிசெய்யும் முயற்சியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். எனினும் கோளாறை சரிசெய்ய முடியவில்லை. இதனால் ரெயில் பெட்டி மாற்றப்படும் என்று பயணிகள் எதிர்பார்த்தனர். ஆனால், அதே பெட்டியுடன் நெல்லை அதிவிரைவு ரெயில் மீண்டும் புறப்பட்டது. முன்பு போல் மிகவும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டது.

ஒருவழியாக காலை 8.30 மணிக்கு அந்த ரெயில் திண்டுக்கல்லுக்கு வந்து சேர்ந்தது. நெல்லை அதிவிரைவு ரெயில் தினமும் அதிகாலை 2.32 மணிக்கு திண்டுக்கல்லுக்கு வருவது வழக்கம். ஆனால் 6 மணி நேரம் தாமதமாக வந்தது. ஆனால், அந்த ரெயில் காலை 7.10 மணிக்கு நெல்லையை சென்றடைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்த ரெயில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர். இந்த நிலையில் திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், பாலக்காடு-திருச்செந்தூர் பயணிகள் ஆகியவை திண்டுக்கல்லுக்கு வந்தன. நெல்லை அதிவிரைவு ரெயில் புறப்படும் முன்பு, அந்த 2 ரெயில்களும் புறப்பட்டு சென்றன.

இது நெல்லை அதிவிரைவு ரெயிலில் வந்த பயணிகளுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகள், நெல்லை அதிவிரைவு ரெயில் முன்பு தண்டவாளத்தில் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ரெயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 20 நிமிட பேச்சுவார்த்தைக்கு பின்னர், பயணிகள் மறியலை கைவிட்டு ரெயிலில் ஏறினர். அதன்பின்னர் ரெயில் புறப்பட்டு சென்றது.

அந்த ரெயில் நெல்லை சந்திப்பு ரெயில்நிலையத்திற்கு காலை 6-45 மணிக்கு வர வேண்டும். ஆனால் 7 மணி நேரம் தாமதமாக மதியம் 1-45 மணிக்கு வந்து சேர்ந்தது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “ரெயில் தாமதமாக வந்ததால் எங்களால் சரியான நேரத்துக்கு ஊருக்கு வந்து சேர முடியவில்லை. கழிப்பறை செல்ல முடியாமலும், சாப்பிட முடியாமலும் அவதிப்பட்டோம். சில பயணிகள் மதுரை ரெயில் நிலையத்தில் இறங்கி வேறு வாகனங்களில் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். ரெயில்வே ஊழியர்கள் ரெயிலை முறையாக பராமரிப்பது இல்லை. சரியாக பராமரித்தால் இதுபோன்ற பிரச்சினை ஏற்படாது. நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலையும், பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலையும் தனியார்மயமாக்க அரசு முடிவு செய்து உள்ளதாகவும், இதனால் தான் பராமரிப்பு சரியாக இல்லை என்றும் கூறப்படுகிறது. அந்த ரெயில்களை தனியார்மயமாக்கக்கூடாது. அவை நெல்லை மக்களின் அடையாளம்“ என்றனர்.

Next Story