திருப்பூரில் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம்


திருப்பூரில் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 27 Oct 2019 4:15 AM IST (Updated: 27 Oct 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் அரசு டாக்டர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

திருப்பூர்,

காலம் சார்ந்த ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் தொடங்கியது.

முன்னதாக திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நேற்று காலை திருப்பூர் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி வளாகத்தில் நடைபெற்றது.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களை நியமனம் செய்ய வேண்டும். கிராம சேவை செய்த அரசு டாக்டர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பொது சுகாதாரத்தை காக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த தர்ணா போராட்டத்துக்கு சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர்கள் கார்த்திகேயன், கிருபானந்த், அரிகரகுகன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் 20-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் திருப்பூரில் அரசு டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு பகுதிகளில் நோயாளிகள் பாதிக்காத வகையில் முக்கிய பிரிவுகளில் உள்ள டாக்டர்கள் மட்டும் பணியாற்றி வருகிறார்கள்.

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று 40-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அரசு ஆஸ்பத்திரியில் இருப்பிட டாக்டர், இணை இயக்குனர் உள்ளிட்ட பொறுப்பில் உள்ளவர்கள் பணியாற்றினார்கள்.

புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்டவற்றில் போதுமான டாக்டர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

இதுபோல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பல்லடத்தில் உள்ள அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து ஒவ்வொரு பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story