திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா - நாளை தொடங்குகிறது


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா - நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 27 Oct 2019 3:45 AM IST (Updated: 27 Oct 2019 1:08 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

திருச்செந்தூர், 

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளுகிறார்.

காலை 6.30 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. யாகசாலையில் எழுந்தருளிய ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி, மதியம் 12 மணியளவில் தீபாராதனை நடைபெறுகிறது. மதியம் 12.45 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது.

மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் கிரி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

2-ம் நாளான நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் 5-ம் நாளான 1-ந்தேதி வரையிலும், அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.

தொடர்ந்து சுவாமி, அம்பாள்களுக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் கிரி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

6-ம் நாளான வருகிற 2-ந்தேதி (சனிக்கிழமை) மாலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருப்பார்கள். இதையொட்டி விரதம் இருக்கும் பக்தர்களின் வசதிக்காக, கோவில் நாழிக்கிணறு பஸ் நிலைய வளாகத்தில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கோவில் வளாகத்தில் கூடுதலாக தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரையில் பொக்லைன் எந்திரம் மூலம் மணலை சீரமைக்கும் பணி நடைபெற்றது.

கடலில் புனித நீராடும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாதவாறு, தடுப்பு மிதவைகள் மிதக்க விடப்பட்டு உள்ளன. கோவில் கடற்கரையில் போலீசார் உயரமான இடங்களில் இருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடும் வகையில், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Next Story