மாவட்ட செய்திகள்

காலில் அடிபட்ட குட்டியானைக்கு சிகிச்சை அளிக்க பலாப்பழத்தில் மாத்திரை வைத்து தாய் யானைக்கு கொடுத்தனர் + "||" + To treat a foot elephant Put the pill on the fruit Mother gave it to the elephant

காலில் அடிபட்ட குட்டியானைக்கு சிகிச்சை அளிக்க பலாப்பழத்தில் மாத்திரை வைத்து தாய் யானைக்கு கொடுத்தனர்

காலில் அடிபட்ட குட்டியானைக்கு சிகிச்சை அளிக்க பலாப்பழத்தில் மாத்திரை வைத்து தாய் யானைக்கு கொடுத்தனர்
காலில் அடிபட்ட குட்டியானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் பலாப்பழத்தில் மாத்திரை வைத்து தாய் யானைக்கு கொடுத்தனர். சாலையோரத்தில் நின்றிருந்த யானையை பார்த்து வாகனத்தில் சென்ற 2 பேர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
வால்பாறை,

வால்பாறை அருகே உள்ள நல்லமுடி எஸ்டேட் பகுதியில் முகாமிட்டிருந்த யானைக் கூட்டத்தை சேர்ந்த ஒரு குட்டியானைக்கு காலில் அடிபட்டு நடக்க முடியாமல் போனது. இதனால் அந்த யானை கடந்த சில நாட்களாக அங்கேயே நின்று கொண்டிருக்கிறது. குட்டிக்கு பாதுகாப்பாக தாய் யானையும் அங்கிருந்து செல்லாமல் பாசப்போராட்டம் நடத்துகிறது. இதற்கிடையில் அங்கிருந்த மற்ற யானைகள் தோனிமுடி எஸ்டேட் பகுதிக்கு சென்று முகாமிட்டுள்ளன. இந்த நிலையில் ஆபத்தான நிலையில் அவதிப்படும் குட்டி யானைக்கு உரிய சிகிச்சையளித்து பாதுகாக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குனரும், மாவட்ட வனஅலுவலருமான மாரிமுத்து தலைமையில், வால்பாறை அரசு கால்நடை டாக்டர் மெய்யரசு, யானை ஆராய்ச்சியாளர் கணேஷ் மற்றும் வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் வால்பாறை அருகே உள்ள நல்லமுடி எஸ்டேட் தேயிலைத் தோட்ட பகுதியில் காலில் அடிபட்ட குட்டி யானையுடன் தாய் யானை தேயிலைத் தோட்டத்தில் தொடர்ந்து முகாமிட்டிருந்தது.


இந்த நிலையில் நேற்று காலை மாவட்ட வன அலுவலர் தலைமையில், கால்நடை மருத்துவர் மற்றும் வனத்துறையினர் தாயுடன், குட்டியானை இருக்கும் இடத்துக்கு சென்றனர். குட்டி யானைக்கு சிகிச்சை அளிக்க, அதன் அருகில் சென்றால் தாய் யானை வந்து தாக்கிவிடும் என்பதால், குட்டியானைக்கு என்று தனியாக மருந்து கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இது குறித்து மானாம்பள்ளி வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

குட்டியானைக்கு மருந்து கொடுக்க முடியாத நிலையில் தாய் யானைக்கு தொடர்ந்து மருந்து கொடுத்து வருகிறோம். தாய் யானைக்கு மருந்து கொடுப்பதன் மூலம், அதனிடம் குட்டியானை பால் குடிக்கும்போது, அதற்கும் மருந்துகள் சென்று விடும். இதனால் தாய் யானைக்கு உடல் ஆராக்கியத்திற்கும், குட்டியானைக்கு காலில் ஏற்பட்ட காயம் குணமடைவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதற்கும் மருந்தும், வைட்டமின் மாத்திரைகளும் பலாப்பழத்தில் வைத்து கொடுக்கப்படுகிறது. தாய் யானையும் தொடர்ந்து பலாப்பழத்தில் வைத்து கொடுக்கும் மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறது. இதனால் விரைவில் குட்டியானை குணமடையும். தாய் யானையும் சோர்வில் இருந்து நீங்கும். மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் தாய் மற்றும் குட்டி யானையை கண்காணித்து வருகின்றனர். இந்த இரண்டு காட்டு யானைகளும் 6-வது நாளாக நல்லமுடி எஸ்டேட் பகுதியிலேயே முகாமிட்டு வருகிறது.

இந்த நிலையில் இரவு 10.30 மணியளவில் தாய் யானை குட்டி யானையுடன் ஆனைமுடி நல்லமுடி சாலையின் ஓரத்தில் உள்ள நீரோடைக்கு தண்ணீர் குடிப்பதற்கு வந்துள்ளது. அப்போது ஹைபாரஸ்ட் எஸ்டேட்டைச் சேர்ந்த சுதன்(வயது25), சரவணன்(25) ஆகிய இரண்டு பேரும் ஆனைமுடியிலிருந்து ஹைபாரஸ்ட் எஸ்டேட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். யானை சாலை ஓரத்தில் நின்றதை பார்த்த இருவரும் பிரேக் பிடித்து மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர். அப்போது இரண்டு பேரும் சறுக்கி கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அக்கம், பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

குட்டி யானைக்கு காலில் அடிபட்டுள்ளதால் இரண்டு யானைகளும் நல்லமுடி எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ளது. எனவே யானைகள் எந்த இடத்திற்கு இரவு நேரத்தில் நிற்கும் என்பது வாகனங்களிலிருந்து வருபவர்களுக்கு தெரியாது. எனவே நல்லமுடி,ஆனைமுடி, முத்துமுடி ஆகிய எஸ்டேட் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இரவு நேரங்களில் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அந்த பகுதியில் உள்ள வனத்துறையினிடம் கேட்டு அதன் பின்னர் செல்லவேண்டும். குட்டி யானைக்கு காலில் ஏற்பட்ட காயம் குணமடைந்து தாய் யானையும்,குட்டியும் வனப்பகுதிக்குள் செல்லும் வரை எஸ்டேட் பகுதி மக்கள் வனத்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவை அருகே பரபரப்பு வாயில் காயத்துடன் சுற்றிய காட்டு யானை பரிதாப சாவு
கோவை அருகே வனப்பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.
2. யானையை மீட்க சென்ற போது பரிதாபம்: காண்டூர் கால்வாயில் அடித்து செல்லப்பட்ட வனக்காவலர் பலி
யானையை மீட்க சென்ற போது காண்டூர் கால்வாயில் அடித்து செல்லப்பட்ட வனக்காவலர் பலியானார். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது.
3. முதுமலையில் குட்டியானையை புலி அடித்து கொன்றது உடல் அருகில் தாய் யானை பாசப்போராட்டம்
முதுமலையில் குட்டியானையை புலி அடித்து கொன்றது. அதன் உடல் அருகில் தாய் யானை பாசப்போராட்டம் நடத்தியது.
4. மின் வேலியில் சிக்கி யானை சாவு விவசாயி கைது
தாளவாடி அருகே மின் வேலியில் சிக்கி யானை இறந்தது. இதுதொடர்பாக விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர்.