விபத்து இல்லாமல் தீபாவளியை கொண்டாடுவது எப்படி? மாணவர்களுக்கு, தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம்


விபத்து இல்லாமல் தீபாவளியை கொண்டாடுவது எப்படி? மாணவர்களுக்கு, தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம்
x
தினத்தந்தி 27 Oct 2019 4:00 AM IST (Updated: 27 Oct 2019 2:13 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில்லாமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது எப்படி? என்பது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.

நாகர்கோவில்,

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிக்கும் போது விபத்து இல்லாமல் தீபாவளியை எப்படி கொண்டாடுவது என்பது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நாகர்கோவில் தீயணைப்பு நிலைய அதிகாரி துரை தலைமையிலான தீயணைப்பு படையினர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

குறிப்பாக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் ஒழுகினசேரி கலைவாணர் அரசு பள்ளி மாணவர்கள் முன்னிலையிலும், நாகர்கோவில் வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

செயல் விளக்கம்

அப்போது பட்டாசுகளை வெடிக்கும் முறை, பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து விளக்கம் அளித்தும், பட்டாசுகளை வெடிக்கச் செய்து செயல் விளக்கத்துடன் செய்து காண்பித்தனர்.

விபத்து இல்லாமல் தீபாவளி பண்டிகையை கொண்டாட பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கிட சுப்பிரமணியன் வழங்கியுள்ள அறிவுரைகள் விவரம் வருமாறு:-

தளர்வான ஆடைகள்

பெரியவர்கள் மேற்பார்வையில் சிறுவர்கள் பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது அருகில் ஒரு வாளி தண்ணீர் வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டுக்கு வெளியில் திறந்த வெளியில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். வீட்டின் மாடியில் பட்டாசு வெடிக்கக்கூடாது. பட்டாசு வெடிக்கும்போது தளர்வான ஆடைகளை அணியக்கூடாது. குடிசைகள் நிறைந்த பகுதியில் பட்டாசு வெடிக்கக் கூடாது.

ஆஸ்பத்திரி, திரையரங்கு பொதுமக்கள் கூடும் இடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது. நீண்ட வத்திகளைக் கொண்டு பட்டாசு வெடிக்கச் செய்யுங்கள். வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் வெடிக்க முயற்சிக்க கூடாது. எரியும் அடுப்பு பக்கத்தில் பட்டாசுகளை வைக்க கூடாது. பட்டாசுகளை சிறுவர்கள் கையில் எடுத்து விளையாட அனுமதிக்க கூடாது. ராக்கெட் போன்ற வெடிகளை வெட்டவெளியில் வைத்து வெடிக்க வேண்டும்.

கோர்ட்டு உத்தரவுப்படி...

பட்டாசுகளை டப்பா அல்லது வேறு பொருட்களால் மூடி வெடிக்க கூடாது. தீக்காயம் ஏற்பட்டால் உடனே காயத்தில் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்கக்கூடாது. தீ விபத்து ஏற்பட்டால் தாமதம் இல்லாமல் அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு 101 என்ற அவசர தொலைபேசி எண்ணை அழைக்க வேண்டும். ஆடையில் தீப்பற்றிக் கொண்டால் ஓடக்கூடாது. தரையில் படுத்து புரள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினர்.



Next Story