வார்டு வரையறைக்கு எதிர்ப்பு: பேரூராட்சி அலுவலகம் முற்றுகை


வார்டு வரையறைக்கு எதிர்ப்பு: பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 27 Oct 2019 4:30 AM IST (Updated: 27 Oct 2019 3:24 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பு அருகே எஸ்.கொடிக்குளத்தில் புதிதாக வார்டு வரையறை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு அருகே எஸ்.கொடிக்குளம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. தற்போது வார்டுகள் புதிதாக வரையறை செய்யப்பட்டுள்ளன. இதில் நெடுங்குளம் ராமகிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த சில பகுதிகள் கூமாப்பட்டியில் உள்ள 3-வது வார்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை கூமாப்பட்டியிலிருந்து எஸ்.கொடிக்குளம் பேரூராட்சியில் தங்களை இணைக்க வேண்டும் என வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் அமைச்சியார்புரம் காலனியை சேர்ந்த சில பகுதிகள் ராமகிருஷ்ணாபுரம் காலனியில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வத்திராயிருப்பு தாசில்தார் ராஜா உசேன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ராமகிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்தவர்கள் எங்கள் பகுதியை கூமாப்பட்டி வார்டில் சேர்த்துள்ளனர். எங்கள் பகுதியில் 190-க்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. முறையற்ற முறையில் வார்டு வரையறை செய்யப்பட்டுள்ளதால் மிகவும் சிரமமாக உள்ளது. பழைய முறையிலேயே எஸ்.கொடிக்குளம் பேரூராட்சியில் இருக்க வேண்டும் என்றனர். மற்றும் அமைச்சியார்புரம் காலனி பொதுமக்கள் கூறுகையில் தங்கள் ஊரில் அதிக வாக்குகள் இருப்பதாகவும் இதனால் வார்டை தனி வார்டாக மாற்ற வேண்டும் இல்லை என்றால் பழைய முறையிலேயே வார்டு இருக்க வேண்டும் என கூறினர்.

அவர்களது கோரிக்கையினை கேட்டறிந்த தாசில்தார், இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் பேசி முடிவு எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார். இதனை அடுத்து முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story