முல்லைப்பெரியாற்றில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவரின் கதி என்ன? மீட்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல்


முல்லைப்பெரியாற்றில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவரின் கதி என்ன? மீட்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 29 Oct 2019 4:30 AM IST (Updated: 28 Oct 2019 10:36 PM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவரின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவரை மீட்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கம்பம்,

கம்பம்மெட்டு காலனியை சேர்ந்தவர் அஸ்கர்அலி. அவருடைய மகன் முகமது யூனுஸ் (வயது 20). மதுரையில் உள்ள ஒரு தனியார் கலைக்கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். தீபாவளி விடுமுறைக்காக அவர், சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று மாலை அவர், அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள், சிலருடன் சுருளிப்பட்டி தொட்டமன்துறை முல்லைப்பெரியாற்றில் குளிக்க சென்றார்.

அப்போது முகமதுயூனுஸ் தண்ணீரில் ஆழமான பகுதிக்கு சென்றார். இதனால் அவர் தண்ணீரில் தத்தளித்தபடி கூச்சல் போட்டார். உடன் சென்ற நண்பர்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால் அது முடியவில்லை. தண்ணீர் அதிகமாக சென்றதால் அவர் அடித்து செல்லப்பட்டார்.

இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினரும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்றதாலும், இரவு நேரமானதாலும் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் முகமது யூனுசின் கதி என்ன? என்று தெரியவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மாணவனை உடனடியாக மீட்கக்கோரி கம்பம்-காமயகவுண்டன்பட்டி சாலை பிரிவில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இரவு நேரம் ஆனதாலும், ஆற்றில் தண்ணீர் அதிகளவு செல்வதாலும் தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) முல்லைப்பெரியாற்றில் தண்ணீரின் அளவை குறைத்து மாணவரை தேடும் பணி தொடங்கும் என்று போலீசார் தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story