கள்ளத்தொடர்பை கண்டித்ததால் அரசு ஊழியர் படுகொலை - மனைவி உள்பட 5 பேர் கைது
நத்தத்தில் கள்ளத்தொடர்பை கண்டித்ததால் அரசு ஊழியர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய மனைவி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நத்தம்,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சிவபாலாஜி (வயது 34). இவர், நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். அவருடைய மனைவி சண்முகபிரியா (28). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். சிவபாலாஜியின் நண்பர் பாண்டி (31). டிராவல்ஸ் உரிமையாளர். இவரும், அதே பகுதியில் வசித்து வருகிறார்.
இவருக்கும், சண்முகபிரியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த சிவபாலாஜி தனது மனைவியையும், பாண்டியையும் கண்டித்தார். மேலும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நத்தம் சாய ஓடை அருகே சிவபாலாஜி சென்றார். அங்கு பாண்டி, அதே பகுதியை சேர்ந்த அவருடைய கூட்டாளிகளான ராஜாராம் (34), எலக்ட்ரீசியன் யோகராஜ் (26), மதுரையை சேர்ந்த விக்னேஷ் (27) ஆகியோர் சிவபாலாஜியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்களிடம் கோபித்து கொண்டு சிவபாலாஜி அங்கிருந்து புறப்பட்டார். சாலையில் நடந்து சென்ற சிவபாலாஜி மீது பாண்டி காரை ஓட்டி வந்து மோதினார். இதில் அவர் படுகாயமடைந்து கீழே விழுந்தார். உடனே அங்கிருந்த கல்லை எடுத்து சிவபாலாஜியின் தலையில் போட்டார். இதில் சம்பவ இடத்திலேயே சிவபாலாஜி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் சிவபாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக சிவபாலாஜியின் தாயார் பூங்கோதை நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியை கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ராஜாராம், யோகராஜ், விக்னேஷ், சிவபாலாஜியின் மனைவி சண்முகபிரியா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
கைதான பாண்டி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், சிவபாலாஜி மனைவிக்கும் எனக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதுகுறித்து சிவபாலாஜிக்கு தெரிந்ததால் அவர் என்னை கண்டித்தார். சம்பவத்தன்று நான், ராஜாராம், யோகராஜ், விக்னேஷ் ஆகியோரை அழைத்து சென்று சிவபாலாஜியுடன் பேசினேன். மனைவியுடன் உள்ள தொடர்பை துண்டிக்கும்படி அவர் கூறினார். அதற்கு நான் மறுத்ததால், அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அப்போது காரை ஓட்டிச்சென்று அவர் மீது மோதினேன். அதில் கீழே விழுந்த அவரது தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story