ஆரணி அருகே பரபரப்பு மின்கோபுரத்தில் கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை
ஆரணி அருகே மின்கோபுரத்தில் கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ஆரணி,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அரையாளம்காலனி பகுதியை சேர்ந்தவர் பொன்னன் என்ற சுதாகர் (வயது 38). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி உமா. இவர்களுக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இதேபகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. பெயிண்டர். இவருடைய மனைவி தேன் என்ற தேன்மொழி (40). இவர்களுக்கு 2 மகள்கள். அதில் ஒரு மகளுக்கு திருமணமாகிவிட்டது.
மூர்த்தி வேலைக்காக அடிக்கடி வெளியூர்களுக்கு செல்வது வழக்கம். இதனால் சுதாகருக்கும், தேன்மொழிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது.
இந்த நிலையில் நேற்று பகலில் வீட்டின் அருகே 60 அடி உயரத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மின்கோபுரத்தில் 10 அடி உயரத்தில் சுதாகர் மற்றும் தேன்மொழி ஆகியோர் தனித்தனியே இடைவெளிவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கினர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இரு குடும்பத்தை சேர்ந்த உறவினர்களும் தகவல் அறிந்து பிணங்களை கீழே இறக்கி தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனை செய்ய உறவினர்களிடம் கேட்டனர். ஆனால் உறவினர்கள் பிணங்களை கொடுக்க மறுத்துவிட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இரு பிணங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்ததாகவும், இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டு அவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story