குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகள் வழங்காததால் பொதுமக்கள் போராட்டம்
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகள் வழங்காததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம்,
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து தினமும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் நோயாளிகள் வரை புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள்நோயாளிகளாக 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு 30-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும் டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக வந்தனர். ஆனால் அங்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் மருந்து, மாத்திரைகள் வழங்க டாக்டர்கள் இல்லை.
இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் மருத்துவமனையில் காத்திருந்தனர். ஆனால் மருந்து, மாத்திரைகள் வழங்க டாக்டர்கள் யாரும் வராததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மருத்துவமனைக்கு வெளியில் வந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிதுநேரத்துக்கு பின்னர் மருத்துவமனை வளாகத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மருத்துவ அலுவலர் (பொறுப்பு) அருளரசி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் கூறுகையில், தற்போது எங்கு பார்த்தாலும் காய்ச்சல் உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வந்தபோது முறையாக சிகிச்சை அளிக்கவில்லை. மேலும் டாக்டர்கள் கனிவாக பேசுவதில்லை. மருந்து, மாத்திரைகள் கொடுக்க யாரும் இல்லை. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்து, மருந்து, மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story