பவானியில் பரபரப்பு: பட்டாசு வெடிப்பதில் தகராறு; வீடு அடித்து நொறுக்கப்பட்டது; கணவன்-மனைவி உள்பட 4 பேர் மீது தாக்குதல்


பவானியில் பரபரப்பு: பட்டாசு வெடிப்பதில் தகராறு; வீடு அடித்து நொறுக்கப்பட்டது; கணவன்-மனைவி உள்பட 4 பேர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 29 Oct 2019 4:15 AM IST (Updated: 29 Oct 2019 12:22 AM IST)
t-max-icont-min-icon

பவானியில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் வீடு அடித்து நொறுக்கப்பட்டது. மேலும் கணவன்-மனைவி உள்பட 4 பேர் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பவானி,

பவானி அந்தியூர் பிரிவு அருகே உள்ள வி.என்.சி.கார்னர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 48). இவர் பவானியில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தின் வசூல் மையம் நடத்தி வருகிறார்.

தீபாவளி தினமான நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டின் முன்பு பட்டாசு வெடித்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் பட்டாசு வெடித்தது சம்பந்தமாக சரவணனிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதில் வாய்த்தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் வாலிபர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். அதன்பின்னர் அந்த 2 வாலிபர்களுக்கும் ஆதரவாக 10-க்கும் மேற்பட்டோர் அங்கு கும்பலாக வந்தனர். அவர்கள் சரவணன், அவருடைய மகன், மனைவி, தாயார் ஆகியோரை தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர். மேலும் வீட்டின் கதவையும் அடித்து நொறுக்கினர். இதில் கதவு சேதம் அடைந்தது.

படுகாயம் அடைந்த சரவணன் பவானி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story