கூடலூரில் பரிதாபம், லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; 2 மாணவர்கள் பலி


கூடலூரில் பரிதாபம், லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; 2 மாணவர்கள் பலி
x
தினத்தந்தி 29 Oct 2019 3:30 AM IST (Updated: 29 Oct 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் கோழிப்பாலத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் குணசீலன் (வயது 19). இவர் கூடலூர் அரசு கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் மகன் கலைச்செல்வன் (20). இவர் கூடலூர் தோட்ட தொழிலாளர் குழந்தைகள் தொழிற்பயிற்சி மையத்தில் படித்து வந்தார்.

நேற்று முன்தினம் காலையில் தீபாவளி பண்டிகை என்பதால் தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். பின்னர் அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கூடலூருக்கு புறப்பட்டனர். கூடலூர் சென்று விட்டு மீண்டும் கோழிப்பாலம் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை கலைச்செல்வன் ஓட்டினார். பின்னால் குணசீலன் உட்கார்ந்து இருந்தார்.

அப்போது கூடலூர் நந்தட்டி பகுதியில் வந்தபோது லாரி ஒன்று நாடுகாணி நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் லாரியை முந்தி செல்வதற்காக மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டினார். அப்போது வலதுபுற சாலையோரம் மோட்டார் சைக்கிளும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதில் மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை சற்று திருப்பியபோது எதிர்பாராதவிதமாக லாரியின் பக்கவாட்டில் மோட்டார் சைக்கிள் மோதியது. மேலும் கண்இமைக்கும் நேரத்தில் லாரியின் சக்கரத்தில் கலைச்செல்வன், குணசீலன் ஆகியோர் சிக்கினார்கள். இதில் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.

இதனை கவனித்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து உடனடியாக கூடலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கூடலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், ராஜாமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விபத்தில் சிக்கிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அப்போது மாணவர்கள் 2 பேரின் உடல்களை பார்த்த அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இது பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story