ஏம்பலத்தில் இன்று மக்கள் குரல் முகாம்: நாராயணசாமி பங்கேற்பு


ஏம்பலத்தில் இன்று மக்கள் குரல் முகாம்: நாராயணசாமி பங்கேற்பு
x
தினத்தந்தி 29 Oct 2019 5:00 AM IST (Updated: 29 Oct 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

ஏம்பலம் தொகுதியில் மக்கள் குரல் முகாம் இன்று நடக்கிறது. முகாமில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பங்கேற்கிறார்.

புதுச்சேரி,

புதுவை கலெக்டர் அருண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து மக்கள் குரல் எனப்படும் மக்கள் குறை தீர்ப்பு முகாம்களை, அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் நடத்த புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களை நேரடியாக அணுகி அவர்களின் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் மக்கள் குரல் நிகழ்ச்சி கடந்த ஜூலை 18-ந்தேதி நெட்டப்பாக்கம் தொகுதியில் தொடங்கி வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) ஏம்பலம் தொகுதியில் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மக்கள் குரல் முகாம் நடைபெற உள்ளது. முதல்-அமைச்சர் நாராயணசாமி அமைச்சர்கள் முன்னிலையில் நிகழ்ச்சியை தொடங்கிவைப்பார்.

புதுச்சேரி அரசின் அனைத்து துறைகளும் பங்கு பெறும் இம்முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு அரசின் திட்டங்களை அறியவும் தங்கள் குறைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கவும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கலெக்டர் அருண் கூறியுள்ளார்.

Next Story