எட்டயபுரத்தில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு
எட்டயபுரத்தில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
எட்டயபுரம்,
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மாதாபுரத்தைச் சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 53). இவர் விருதுநகர் மாவட்டம் நல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலையில் சின்னப்பன் கோவில்பட்டிக்கு சென்று, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கினார்.
பின்னர் அவர், கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்துக்கு செல்வதற்காக, இளையரசனேந்தல் ரோடு சந்திப்பு பகுதியில் நடந்து சென்றார். அப்போது சின்னப்பனுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை எட்டயபுரம் மாதாபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு சென்றனர்.
எட்டயபுரம் ஆர்.சி. தெருவைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் சங்கர் (32). பெயிண்டரான இவர் சின்னப்பனின் உறவினர் ஆவார். சின்னப்பன் இறந்த தகவல் அறிந்ததும், அவரது வீட்டுக்கு சங்கர் துக்கம் விசாரிக்க சென்றார். அப்போது சின்னப்பனின் உடலை பொதுமக்களின் அஞ்சலிக்காக, குளிர்பதன கண்ணாடி பெட்டியில் (பிரீசர்) வைக்கும் பணியில் சங்கர் ஈடுபட்டார்.
அப்போது சின்னப்பனின் உடலுடன் குளிர்பதன கண்ணாடி பெட்டியை சங்கர் நகர்த்தினார். அப்போது எதிர்பாராதவிதமாக சங்கர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி பலியான சங்கருக்கு லதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். எட்டயபுரத்தில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story