சீர்காழியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளங்களில் தண்ணீர் நிரப்பப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு + "||" + Will the ponds be filled with water to remove the encroachments on the dam? The expectation of the public
சீர்காழியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளங்களில் தண்ணீர் நிரப்பப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
சீர்காழியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளங்களில் தண்ணீர் நிரப்பப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சீர்காழி,
சீர்காழி தென்பாதி ஈசானியத்தெரு, பிடாரி வடக்கு வீதி, தாடாளன்கோவில், கீழதென்பாதி, குளத்துமேட்டுத்தெரு, திருக்கோலக்கா, புளிச்சக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.
இந்த குளங்கள் நகர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும், மழை நீரை சேகரிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது.
இந்த நிலையில் முறையாக பராமரிக்காததாலும், நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கட்டப்பட்டதாலும் கடந்த சில ஆண்டுகளாக நகர் பகுதியில் உள்ள அரியாப்பிள்ளை குளம், திருவேங்கடம்பிள்ளை குளம், தாமரைக்குளம், பக்கிரி குட்டை குளம், அய்யனார்கோவில் குளம், கரிக்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் செல்ல வழியில்லாமல் வாய்க்கால்களில் செடி-கொடிகள் மண்டி கிடக்கிறது. இதனால் குளங்கள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. எனவே சீர்காழி நகர் பகுதியில் உள்ள அனைத்து குளங்களிலும் தண்ணீர் நிரப்ப வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை சம்பந்தப்பட்ட துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நடவடிக்கை
இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக சீர்காழி நகர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஆனாலும், நகர் பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் செல்ல வழியில்லாததால் குளங்கள் நிரம்பாமல் வறண்டு காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சீர்காழி நகர் பகுதியில் உள்ள குளங்களுக்கு நீர் செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளங்களில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.