வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்க பா.ஜனதா அரசு கவிழக்கூடாது குமாரசாமி சொல்கிறார்


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்க பா.ஜனதா அரசு கவிழக்கூடாது குமாரசாமி சொல்கிறார்
x
தினத்தந்தி 29 Oct 2019 4:00 AM IST (Updated: 29 Oct 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்க பா.ஜனதா அரசு கவிழக்கூடாது என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

உப்பள்ளி,

உப்பள்ளியில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் கொடியை பிடித்து திரிவதாக சித்தராமையா தெரிவித்துள்ளார். டி.கே.சிவக்குமார் சிறைக்கு சென்று வந்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தொண்டர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். நானும் கூட அவரை சந்தித்து பேசினேன். இதற்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். டி.கே.சிவக்குமார் ஜனதாதளம்(எஸ்) கட்சி கொடியை பிடித்து திரிகிறார் என்று பேச வேண்டிய அவசியமில்லை. அதுபற்றி டி.கே.சிவக்குமார் தான் பதிலளிக்க வேண்டும்.

சித்தராமையாவுக்கு சாதி மீது நம்பிக்கை இல்லை. அவர் ஒரு சாதி மற்றும் மதசார்பற்றவர். சித்தராமையா அப்படியே இருந்து கொள்ளட்டும். நாங்கள் சாதியவாதிகள். நான் அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். ஆனாலும் மனிதாபிமான அடிப்படையில் செயல்பட்டு வருகிறேன். மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்க யார் முன் வருகிறார்களோ, அவர்களுக்கு என்னுடைய ஆதரவு எப்போதும் இருக்கும். அது பா.ஜனதாவுக்கோ அல்லது காங்கிரஸ் கட்சிக்கோ தெரியவில்லை.

பா.ஜனதா அரசு கவிழும் என்று சித்தராமையா சொல்லி இருக்கிறார். இந்த அரசு ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. மக்கள் பிரச்சினைகளை தீர்க்க அனைத்து கட்சிகளும் சேர்ந்து பணியாற்ற வேண்டியது அவசியமாகும். அதன்பிறகு, அரசியல் செய்யலாம். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டுள்ளேன். அதுகுறித்து பெங்களூருவுக்கு சென்று முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து பேசுவேன். நான் யாருக்கும் பயந்து இந்த அரசு கவிழும் என்று சொல்ல மாட்டேன். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்களில் இருந்து விடுபட வேண்டும் என்று நினைக்கிறேன்.

அரசை கவிழ்க்க வேண்டும் என்று பழிவாங்கும் அரசியலில் ஈடுபட மாட்டேன். அரசு கவிழ்ந்தால் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை எந்தவொரு அரசியல் தலைவர்களும் கண்டுகொள்ள மாட்டார்கள். அதனால் இந்த அரசு கவிழக்கூடாது. மக்கள் பிரச்சினைகளை தீர்க்க பா.ஜனதா அரசு ஆட்சியில் நீடிக்க வேண்டும். எந்த அரசாக இருந்தாலும், யார் முதல்-மந்திரியாக இருந்தாலும் வடகர்நாடக மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

நான் ஏதாவது வழக்கில் சிறைக்கு செல்வேன் என்று பயந்து பேசவில்லை. என்னை காப்பாற்றுங்கள் என்று யாரிடமும் பிச்சை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. எனது தலைமையிலான கூட்டணி ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் தொலைபேசி ஒட்டுகேட்பு, பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள மன்சூர்கான் நகைக்கடை மோசடி வழக்குகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அந்த வழக்குகள் தொடர்பான விசாரணைக்கு தயாராக உள்ளேன். நகைக்கடை மோசடிக்கும், எனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. நான் எந்த தவறும் செய்யாததால் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

மாநிலத்தில் பெய்த மழை மற்றும் பெரும்பாலான அணைகள் நிரம்பி உள்ளதால் திறந்து விடப்பட்ட தண்ணீரால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. இதற்கு அரசை குறை சொல்லமாட்டேன். நிவாரண பணிகளை மேற்கொள்ளும்படி அரசுக்கு நெருக்கடி கொடுப்பது சகஜமானது. சில மந்திரிகள் அவ்வாறு கூறுகின்றனர். முதல்-மந்திரி எடியூரப்பாவும் சில நேரம் அரசு கஜானா காலியாகி விட்டதாக கூறுகிறார். சில நேரம் கஜானா காலியாகவில்லை என்று சொல்கிறார். அரசு கஜானா காலியாகவில்லை.

எனது தலைமையிலான ஆட்சியில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் கடனில் இருந்து தப்பித்து இருப்பதாக பல விவசாயிகள் என்னிடம் சொல்லி வருகின்றனர். விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதற்காகவே கூட்டணி ஆட்சியில் அனைத்து பிரச்சினைகளையும் சந்தித்தேன். கூட்டணி ஆட்சி கவிழ்வதை தடுக்க அனைத்து முயற்சியும் எடுத்தேன். விவசாய கடன் தள்ளுபடி ஆனதும் கூட்டணி அரசு கவிழவும், முதல்-மந்திரி பதவியை இழக்கவும் தயாரானேன்.

தற்போது மாநிலத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மாநில அரசு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். கஷ்டத்தில் இருந்து மக்கள் மீள வேண்டும். இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story