நெல்லை முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது
நெல்லையில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது. வருகிற 2-ந் தேதி (சனிக்கிழமை) சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.
நெல்லை,
முருகன் கோவில்களில் நடைபெறும் பிரசித்த பெற்ற விழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள பாளையஞ்சாலைகுமார சுவாமி கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில், பாளையங்கோட்டை மேலவாசல் சுப்பிரமணியர் கோவில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது.
பாளையஞ்சாலைகுமார சுவாமி கோவிலில் நேற்று காலை 9 மணிக்கு யாகசாலை பூஜையும், 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகளும் நடந்தது. விழா நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 2-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. அதேபோல் குறுக்குத்துறை முருகன் கோவிலில் நேற்று காலை யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. மாலையில் சுவாமி வீதி உலா நடந்தது. வருகிற 2-ந் தேதி மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சியும், 3-ந் தேதி தபசி காட்சியும் நடக்கிறது. அன்று இரவு திருக்கல்யாணம் வைபவமும் நடக்கிறது. இதேபோல் நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை சிவன் கோவில், செல்வி அம்மன் கோவில்களிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.
Related Tags :
Next Story