சேலத்தில் முன்விரோத தகராறில் வாலிபர் கொலை - 6 பேர் சிக்கினர்
சேலத்தில் முன்விரோத தகராறில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் போலீசில் சிக்கியுள்ளனர்.
சேலம்,
சேலம் களரம்பட்டி எருமாபாளையம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன்கள் சரவணன் (வயது 22), கார்த்திக் (19). இவர்களுக்கும், மூனாங்கரடு செல்லக்குட்டிகாட்டை சேர்ந்த காமராஜ் தரப்பினருக்கும் இடையே கடந்த ஆடிப்பண்டிகையில் நடந்த வண்டி வேடிக்கையின்போது மோதல் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு தீபாவளியன்று கார்த்திக், அவரது சகோதரர் சரவணன் ஆகியோர் கருங்கல்பட்டி இட்டேரி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கு காமராஜ் உள்பட 11 பேர் நின்று கொண்டிருந்தனர். பின்னர் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அடித்து தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து சரவணன் உடனடியாக தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து அங்கு வரவழைத்துள்ளார்.
இதையடுத்து மீண்டும் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில், சரவணனின் மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது தம்பி கார்த்திக், அண்ணனை தாக்கியவர்களை கட்டையால் விரட்டி தாக்கினார். பதிலுக்கு எதிர் தரப்பினரும் தாக்கியபோது, அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய கார்த்திக் கீழே தவறி விழுந்தார். பின்னர் அவரை காமராஜ் தரப்பினர் துரத்தி சென்று கட்டையால் சரமாரியாக தாக்கினர்.
இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்த கார்த்திக்கை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து காமராஜ் தரப்பை சேர்ந்த 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை தேடி வருகின்றனர். மொத்தம் 11 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சரவணன் தரப்பினர் தாக்கியதில் 10 பேர் காயம் அடைந்தனர். இதனால் அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story