நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: ஆழியாறு அணை 116 அடியை எட்டியது


நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: ஆழியாறு அணை 116 அடியை எட்டியது
x
தினத்தந்தி 29 Oct 2019 4:30 AM IST (Updated: 29 Oct 2019 2:38 AM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக ஆழியாறு அணை 116 அடியை எட்டியது. இதையடுத்து ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பொள்ளாச்சி,

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில்சூழ அமைந்துள்ளது ஆழியாறு அணை. இந்த அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. பரம்பிக்குளம்-ஆழியாறு (பி.ஏ.பி.) பாசன திட்டத்தில் உள்ள அணைகளில் முக்கியமான அணையாக உள்ளது. இந்த அணை மூலம் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6 ஆயிரத்து 400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 44 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன.

பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் கோவை குறிச்சி, குனியமுத்தூர் பகுதி மக்களின் குடிநீர் தேவையும் அணை மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இதை தவிர கேரளா மாநிலம் சித்தூர் தாலுகாவில் 15 ஆயிரம் ஏக்கர் பாசனத்துக்கும், குடிநீருக்கும் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இதற்காக ஒப்பந்தப்படி அணையில் இருந்து ஆண்டுதோறும் கேரளாவுக்கு 7¼ டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த தண்ணீர் ஆழியாற்றில் மணக்கடவு என்ற இடத்தில் கேரளாவுக்கு பிரித்து கொடுக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக அணை முழு கொள்ளளவை எட்டியது. அதன்பிறகு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்தப்படி பெய்யாததால் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்தது. இதற்கிடையில் வழக்கமாக ஜூன் மாதம் தொடக்கத்தில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை தாமதமாக ஜூலை மாதம் முதல் பெய்ய தொடங்கியது.

இந்த நிலையில் கடந்த மாதம் மழை பொழிவு குறைந்ததால் மீண்டும் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. கடந்த 2 மாதமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஆழியாறு அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 116 அடியை எட்டி உள்ளது. இதை தொடர்ந்து ஆழியாற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

மழை பொழிவு இல்லாததால் ஆழியாறு அணையின் நீர்மட்டம் பாதியாக குறைந்தது. இதற்கிடையில் தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அப்பர் ஆழியாறு, காடம்பாறை ஆகிய அணைகள் நிரம்பி விட்டன. இதனால் அந்த அணைகளில் இருந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சியாக அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 546 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 59 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கேரளா மற்றும் பொள்ளாச்சி பகுதியில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இதன் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி உத்தரவின் பேரில் உதவி செயற்பொறியாளர் லீலாவதி தலைமையில் ஒரு உதவி பொறியாளர் உள்பட 10 பேர் கொண்ட குழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் வாகனம் மூலம் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் வருவாய் துறை உள்பட அனைத்து துறை அதிகாரிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை தவிர கேரளாவுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆழியாறு உள்பட ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு 2-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனவே பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது 3,864 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3,606 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று (நேற்று) காலை 8 மணி நிலவரப்படி 116.30 அடியை எட்டி உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story