மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க கோரி, அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் போராட்டம்
மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க கோரி நாளையும், (புதன்கிழமை) நாளை மறுநாளும் (வியாழக்கிழமை) அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளதாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் ரவி சங்கர் தெரிவித்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் ரவி சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை,
மாநில அரசு டாக்டர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து 1½ ஆண்டுகளாக பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதுவரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக நாளையும், (புதன் கிழமை) நாளை மறுநாளும் (வியாழக்கிழமை) வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாக்டர்கள் பங்கேற்பார்கள். கோவையில் உள்ள 2 மருத்துவ கல்லூரிகள், 100 ஆரம்ப சுகாதார மையங்கள், 12 அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் 850 டாக்டர்கள் ஈடுபடுவார்கள்.
இந்த போராட்டத்தின் போது ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழுவில் உள்ள டாக்டர்கள் மட்டும் அவசர சிகிச்சை, டெங்கு பிரிவு, இதயம், பிரசவம் ஆகியவைகளை மட்டும் கவனிப்பார்கள். புறநோயாளிகள் பிரிவு, சாதாரண வார்டுக்கு டாக்டர்கள் இருக்கமாட்டார்கள்.
குழுவில் உள்ள டாக்டர்கள் தங்கள் பணியின் போது வருகை பதிவேடு நோட்டில் கையெழுத்திடாமல் பணியை மேற்கொள்வார்கள். நாளைக்குள் (புதன்கிழமை) அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றால் போராட்டம் தொடர்ந்து நீட்டிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட செயலாளர் டாக்டர் ஜெய்சிங், மாநில பொருளாளர் டாக்டர் கனகராஜன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story