பொதுமக்கள் ஒத்துழைப்பால் தீபாவளி தினத்தில் காற்று மாசு அளவு குறைந்தது


பொதுமக்கள் ஒத்துழைப்பால் தீபாவளி தினத்தில் காற்று மாசு அளவு குறைந்தது
x
தினத்தந்தி 29 Oct 2019 4:45 AM IST (Updated: 29 Oct 2019 3:49 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி தினத்தில் காற்று மாசு அளவு குறைந்ததற்கு சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலும், பொதுமக்கள் ஒத்துழைப்புமே காரணம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தாக்கத்தை கண்டறிய சுற்றுப்புற காற்றின் தர ஆய்வையும், ஒலி அளவையும் சென்னையில் சோதனை செய்தது. குறிப்பாக பெசன்ட்நகர், தியாகராயநகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி மற்றும் சவுகார்பேட்டை ஆகிய 5 இடங்களில் கடந்த 20-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய அறிவுறுத்தலின்படி 14 நாட்கள் ஆய்வு செய்யப்பட உள்ளது.

அதாவது தீபாவளிக்கு 7 நாட்களுக்கு முன்பாகவும், தீபாவளி அன்றும் தீபாவளிக்கு 7 நாட்களுக்கு பின்பாகவும் காற்று மாசு காரணிகளின் அளவுகளை கண்டறியும் பணியை தொடங்கியது. தற்போது ஒலி மாசு அளவு சென்னையில் 5 இடங்களில் தீபாவளிக்கு முன்பு கடந்த 20-ந்தேதி அன்றும், தீபாவளி அன்று (கடந்த 27-ந்தேதி) அன்றும் கணிக்கப்பட்டது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் மாசு குறைந்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.

ஒலி மாசு கண்காணிப்பு

இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பட்டாசு வெடிப்பு நேரம் குறைந்ததால், வளி மண்டலக்காற்று கண்காணிப்பை பொறுத்தவரையில் தீபாவளிக்கு முன்பு அதாவது கடந்த 20-ந்தேதி காலை 6 மணி முதல் கடந்த 27-ந்தேதி காலை 6 மணி வரையிலும், தீபாவளி அன்று காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை கண்காணிக்கப்பட்டது.

ஒலி மாசு கண்காணிப்பை பொறுத்தவரையில் கடந்த 20-ந்தேதி மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரையிலும், தீபாவளி தினத்தன்று அதாவது கடந்த 27-ந்தேதி மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரையிலும் கண்காணிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதிகளில் 55-45 டெசிபல் அளவிலும், வர்த்தக பகுதிகளில் 65-55 டெசிபல் அளவிலும் வெடிக்க அனுமதிக்கப்பட்டு இருந்தது.

சவுகார்பேட்டையில் அதிகரிப்பு

தீபாவளி தினத்தன்று மாலை 6 முதல் இரவு 12 மணி வரை காற்று மாசு ஆய்வு செய்யப்பட்டது. அதில் பெசன்ட்நகர் 73 டெசிபல், தியாகராயநகர் 67, நுங்கம்பாக்கம் 74, திருவல்லிக்கேணி 70, அதிகப்பட்சமாக சவுகார்பேட்டையில் 84 டெசிபல் என்ற அளவில் காணப்பட்டது.

கடந்த மாதம் 20-ந்தேதி அதாவது தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு ஆய்வு செய்யப்பட்டதில் பெசன்ட்நகர் 55 டெசிபல், தியாகராயநகர் 72, நுங்கம்பாக்கம் 56, திருவல்லிக்கேணி 59, சவுகார்பேட்டை 73 டெசிபல் என்ற அளவிலும் இருந்தது. கடந்த ஆண்டும் சவுகார்பேட்டையில் மாசு அதிகரித்து காணப்பட்டுள்ளது. தீபாவளி 2018-2019-ம் ஆண்டுகளை ஒப்பிடுகையில் சில இடங்களில் அதிகரித்தும், சில இடங்களில் குறைந்தும் காணப்பட்டது.

பட்டாசு கழிவுகள் குறைவு

சென்னையை பொறுத்தவரையில் பட்டாசுகள் வெடிப்பதால் கிடைக்கும் கழிவுகளை சேகரித்து அதனை கும்மிடிப்பூண்டியில் உள்ள தொழிற்சாலை கழிவுகள் மேலாண்மை கூட்டமைப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி சென்னை மாநகராட்சி உள்ள 15 மண்டலங்களில் சுமார் 21.9 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டன.

ஆனால் கடந்த 2018-ம் ஆண்டு 95 டன்னும், அதற்கு முந்தைய ஆண்டான 2017-ம் ஆண்டு 85 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. அதன்படி கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் நடப்பாண்டு பட்டாசு கழிவுகள் குறைந்து உள்ளது.

பொதுமக்கள் ஒத்துழைப்பு

அனைத்து காற்றுத்தர கண்காணிப்பு நிலையங்களிலும் நுண்துகள்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு உட்பட்டே இருந்தது. சவுகார்பேட்டை கண்காணிப்பு நிலையத்தில் மட்டும் மிதக்கும் நுண்துகள்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட சற்று கூடுதலாக இருந்தது. அனைத்து காற்றுத்தர கண்காணிப்பு நிலையங்களிலும் கந்தக டை-ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் டை-ஆக்சைடு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட மிகவும் குறைந்து காணப்பட்டது. வளிமண்டல ஒலி மாசு அளவு தீபாவளிக்கு முன் 55 டெசிபல் இருந்து 73 டெசிபல் அளவில் இருந்தது. தீபாவளி அன்று 67 டெசிபல்லில் இருந்து 84 டெசிபல் அளவில் இருந்தது.

வளிமண்டல காற்று மற்றும் ஒலி மாசு அளவு குறைந்தமைக்கு சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்பட இதர அரசு துறை மற்றும் ஊடகங்களின் விழிப்புணர்வு பிரசாரமும் காரணமாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story