தேவர் ஜெயந்தியையொட்டி மதுரையில் இருந்து, பசும்பொன்னிற்கு அணையா ஜோதியுடன் பிரசார பேரணி - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
தேவர் ஜெயந்தியையொட்டி மதுரையில் இருந்து அணையா ஜோதியுடன் பிரசார பேரணி நடைபெற உள்ளதாக என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை,
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மதுரைக்கு வருகிறார்கள். அவர்களை வரவேற்பது குறித்து ஜெயலலிதா பேரவை சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த ஆரோக்கியராஜ்-கலாராணி தம்பதியின் 2-வது மகன் சுர்ஜித் வில்சன் நலமுடன் மீண்டு வருவதற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து நின்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.
அதைதொடர்ந்து அமைச்சரும், மாவட்ட செயலாளருமான அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பல்வேறு ஆலோசனை வழங்கி தீர்மானம் நிறைவேற்றினர். தேவர் ஜெயந்தி, குரு பூஜைக்கு வருகை தரும் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சருக்கு ஜெயலலிதா பேரவை, புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் முளைப்பாரி, பூரண கும்ப மரியாதை செய்து பெரும் திரளாக தொண்டர்களோடு மிகச்சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும் போது கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் உழைத்தால் நல்ல வாய்ப்பு உங்களை நாடிவரும். அதே போல் மக்களுக்கு சேவை செய்யும் ஒரு இயக்கமாக இந்த இயக்கம் திகழ்ந்து வருகிறது. தி.மு.க.வில் ஜனநாயகம் என்பது இல்லை. இன்றைக்கு அ.தி.மு.க.வில் ஒரு கிளை செயலாளராக தொடங்கி அதன் பின் ஒன்றிய செயலாளராக இருந்து தற்போது முதல்-அமைச்சராக ஆகியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இந்த இயக்கத்தில் தான் கடைக்கோடி இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் உழைப்பால் முதல் வரிசையில் அமரலாம்.
வருகிற 30-ந்தேதி மதுரைக்கு வருகை தரும் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சருக்கு ஜெயலலிதா பேரவை, புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மேலும் அவர்களின் கரங்களால் அணையா ஜோதி ஏற்றப்பட்டு, அந்த ஜோதியை ஜெயலலிதா பேரவை சேர்ந்த இளைஞர்கள் பசும்பொன் கிராமத்திற்கு கொண்டு செல்வார்கள். அப்போது அவர்கள் முதல்வரின் சாதனை திட்டமான குடிமராமத்து திட்டங்கள் உள்பட பல்வேறு திட்டங்களை மக்களிடத்தில் எடுத்து கூறியபடி செல்வார்கள். இந்த அணையா ஜோதி நிகழ்ச்சி விழிப்புணர்வு பிரசார பேரணியாக அமையும். மேலும் வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் 100 சதவீதம் வெற்றி பெறும் வண்ணம் இந்த நிகழ்ச்சி அமைய உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் சரவணன், மாணிக்கம், நீதிபதி, ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், அ.தி.மு.க. நிர்வாகிகள் ஐ.பி.எஸ்.பாலமுருகன், ஏ.கே.பி.சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story