திருப்பூர் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்சுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: கலெக்டருக்கு டிரைவர்கள் கோரிக்கை


திருப்பூர் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்சுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: கலெக்டருக்கு டிரைவர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 29 Oct 2019 10:45 PM GMT (Updated: 29 Oct 2019 1:35 PM GMT)

திருப்பூர் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்சுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கலெக்டருக்கு 108 ஆம்புலன்சு டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் பொதுமக்கள் தங்களது புகார்களை வாட்ஸ்–அப் மூலம் தெரிவிக்க வாட்ஸ்–அப் எண் ஒன்று வெளியிட்டிருந்தார். இந்த எண்ணிற்கு 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஒரு மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதில் பல வடமாநில மக்களும் உள்ளனர். தற்போது திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்றவைகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இருப்பினும் காய்ச்சலின் தன்மை அறிந்து பாதிக்கப்படும் பொதுமக்களை மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பிவைக்கின்றனர். தினம்தோறும் 4 முதல் 10 நோயாளிகள் வரை கோவை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்புகின்றனர். இதில் பிரச்சினை என்னவென்றால் திருப்பூரிலிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளைக் கொண்டுசெல்ல 2, ஆம்புலன்சுகளே உள்ளன.

மேலும் ஏதாவது மிக அவசரம் எனில் மங்கலத்தில் இருந்து ஒரு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்படும். இந்த 3 ஆம்புலன்சுகளும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கோவை அரசு மருத்துவக்கல்லூரிக்கு எடுத்து சென்று விட்டால், மற்ற அவினாசி, பெருமாநல்லூர், ஊத்துக்குளி, போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து ஆம்புலன்சு வரும். விபத்து, தீக்காயம், வயிற்று வலி, தற்கொலை முயற்சி, நெஞ்சுவலி, மற்றும் கர்ப்பிணி பெண்கள் போன்றவர்களை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்ல 108 ஆம்புலன்சுகள் பற்றாக்குறையால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

இந்தநிலை திருப்பூர் மாநகரத்தில் மட்டுமல்ல அவினாசி, காங்கயம், பல்லடம், தாராபுரம், உடுமலை போன்ற நகரங்களிலும் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை தான். எனவே 108 ஆம்புலன்சுகளின் எண்ணிக்கையை திருப்பூர் மாவட்டத்திற்கு அதிகரித்து தருமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story