ஆபத்தான ஆழ்துளை கிணறுகளை மூடுவது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


ஆபத்தான ஆழ்துளை கிணறுகளை மூடுவது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 30 Oct 2019 4:15 AM IST (Updated: 29 Oct 2019 7:51 PM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் பகுதியில் மூடப்படாமல், திறந்தவெளியில் ஆபத்தான நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பரங்குன்றம்,

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் சுஜித் வில்சன் என்ற 2 வயது குழந்தை தவறிவிழுந்து இறந்துபோனது. இந்த துயர சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் திருப்பரங்குன்றம் பகுதியில் பல்வேறு இடங்களில் அரசு இடங்களிலும், தனியார் இடங்களிலும் மூடப்படாமல் ஆழ்துளை கிணறுகள் ஆபத்தான நிலையில் உள்ளன.

எனவே திறந்தவெளியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் யாவும் போர்க்கால அடிப்படையில் மூட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுப்பார்கள் என்று எதிர்பார்த்து உள்ளனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்வதாக தெரியவில்லை.

திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டியில் மந்தையம்மன் கோவில் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பக்கவாட்டில் பயன்படாத பழைய ஆழ்துளை கிணறு உள்ளது. அது மூடப்படாமல் திறந்தவெளியில் உள்ளது. இதேபோல அதே பகுதியில் பாலமுருகன் கோவில் அருகிலும் பயன்படாத ஆழ்துளை கிணறு மூடப்படாத நிலையில் திறந்தே உள்ளது. தனக்கன்குளம் ஊராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர்நகர் மயான கரையில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் போதுமான தண்ணீர் இல்லை என்று மூடப்படாமல் உள்ளது. அம்மாப்பட்டி ஊருணியிலும் போடப்பட்ட ஆழ்துளை கிணறு மூடப்படாமல் திறந்தே உள்ளது. இதேபோன்று சூரக்குளம் ஊராட்சியில் சமுதாயக்கூடம் மற்றும் பள்ளிக்கூடம் வளாகத்திலும், வாலனேந்தல் குடியிருப்பு பகுதியிலும் மூடப்படாமல் திறந்தநிலையில் ஆழ்துளை கிணறுகள் உள்ளன.

இதுபோன்ற பயன்படாத, மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகள், சிறுவர்–சிறுமிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. எனவே இதுபோன்று ஆபத்தான நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து அவற்றை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Next Story