ஆழ்துளை கிணற்றில் விழுந்து குழந்தை சுஜித் இறப்பு மிகப்பெரிய அவமானம் - மாணிக்கம் தாகூர் எம்.பி. பேச்சு


ஆழ்துளை கிணற்றில் விழுந்து குழந்தை சுஜித் இறப்பு மிகப்பெரிய அவமானம் - மாணிக்கம் தாகூர் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 29 Oct 2019 11:15 PM GMT (Updated: 29 Oct 2019 3:10 PM GMT)

ஆழ்துளை கிணற்றில் விழுந்து குழந்தை சுஜித் இறந்தது மிகப்பெரிய அவமானமான நிகழ்வு என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

ராஜபாளையம்,

ராஜபாளையம அருகே சோழபுரம், கிழவிகுளம், சத்திரப்பட்டி உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் மாணிக்கம் தாகூர் எம்.பி. பொதுமக்களை சந்தித்தார். கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் வைத்து மக்களின் குறைகளை கேட்டு மனுக்கள் பெற்றார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

குழந்தை சுஜித் இறந்த பிரச்சினையில் யாரையும் குறை கூற விரும்பவில்லை. போர்வெல் போடும் பணிகளை நெறிப்படுத்த வேண்டும். செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்புகிறோம். உலகில் வளர்ந்து பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா நான்காவது நாடு என்பது பெருமையாக இருக்கிறது. ஆனால் இந்த நிகழ்வு மிகப்பெரிய அவமானம்.

இது முதல் தடவை நடைபெறவில்லை. நாடு முழுவதும் நடைபெற்று கொண்டிருக்கிறது. வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இதை ஒரு எச்சரிக்கை மணியாக பார்க்க வேண்டும். அடுத்து ஒரு சுஜித் நிகழ்வு நடைபெறக்கூடாது. ஒவ்வொரு பஞ்சாயத்திலும் திறந்து வைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளை கணக்கெடுத்து மூடுவதற்கு முன் நெறிப்படுத்த வேண்டும்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பணம் கொடுத்து ஜெயித்ததற்கு பிறகாவது நம்பிக்கை வந்து உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. அரசு நடத்தும் என நம்புகிறேன். ஒவ்வெரு ஊராட்சியிலும் ஒரு பஞ்சாயத்து தலைவரிடம் கூற வேண்டியதை எம்.பி.யிடம் கூறும் நிலை உள்ளது. மக்கள் பிரதிநிதி இல்லாததன் விளைவுதான் இது. உள்ளாட்சி தேர்தல் நடத்தாததன் விளைவு வளர்ச்சி திட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பஞ்சாயத்திலும் மோடி அரசும், எடப்பாடி அரசும் சேர்ந்து நூறு நாள் வேலை திட்டத்தை 40 நாள் வேலை திட்டமாக வெற்றிகரமாக நடத்தி வருகிறது. சம்பளம் 3 மாதத்திற்கு ஒரு முறை வழங்கி வருகின்றனர். மொத்தத்தில் 10 சதவீத மக்களுக்கே வேலை தருகின்றனர். அதுவும் முழுவதும் தருவதில்லை. இத்திட்டம் பெரிய சமுதாய பாதுகாப்பிற்கான திட்டம். கழிப்பறை திட்டம் முறையாக செயல்படுத்தப்பட வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மேற்கு மாவட்ட காங். தலைவர் தளவாய் பாண்டியன், கிழக்கு வட்டார தலைவர் ரெங்கசாமி, ராஜபாளையம் நகர தலைவர் சங்கர் கணேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜாலிங்கராஜா, சங்குதுரை மற்றும் பேரூராட்சி தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story