பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடக்கோரி அ.தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி: அவினாசி அருகே பரபரப்பு


பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடக்கோரி அ.தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி: அவினாசி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 30 Oct 2019 4:45 AM IST (Updated: 29 Oct 2019 9:04 PM IST)
t-max-icont-min-icon

பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடக்கோரி அவினாசி அருகே அ.தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவினாசி,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ஆரோக்கியராஜின் 2 வயது மகன் சுஜித்வில்சன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்தான். இந்த சம்பவம் தமிழகத்தையே துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடக்கோரி தீக்குளிக்க முயன்றார். அது பற்றிய விவரம் வருமாறு:-

அவினாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி பெரியாயிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 61). இவர் அதே ஊரில் டிபன் கடை நடத்தி வருவதுடன் அ.தி.மு.க பேச்சாளராகவும் உள்ளார்.

இந்த நிலையில் நேற்று பெரியாயிபாளையம் காமாட்சியம்மன் கோவிலின் எதிரே உள்ள ஆழ்துளை கிணறு அருகே நின்ற அவர் திடீரென்று தான் கொண்டு வந்த கேனில் இருந்த மண்எண்ணெயை தன் உடல் மீது ஊற்றினார். இதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து அங்கு ஓடி வந்தனர். அப்போது சிலர் அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி வீசினார்கள்.

அப்போது அவர் கூறும் போது, பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து குழந்தைகள் உயிர்பலியாகும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. திருச்சி மணப்பாறையிலும் 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து பலியாகி விட்டான். இனியும் இது போன்ற துயர சம்பவங்கள் தமிழகத்தில் நடக்க கூடாது. பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும்.

பெரியாயிபாளையம் காமாட்சியம்மன் கோவில் எதிரே பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தான் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார், கிராம நிர்வாக அலுவலர் செண்பகம் மற்றும் பழங்கரை ஊராட்சி செயலாளர் செல்வன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு தீக்குளிக்க முயன்ற சுப்பிரமணியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரது முடிவை கைவிட செய்தனர்.

பின்னர் பெரியாயிபாளையத்தில் காமாட்சியம்மன் கோவில் எதிரே இருந்த பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணற்றை ஊராட்சி நிர்வாகம் மூட ஏற்பாடு செய்தது. அதன்படி ஊழியர்கள் பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணற்றை பிளாஸ்டிக் குழாய் கொண்டு மூடும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அவினாசி பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story