“திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து ஏமாற்றினார்” - கோவை வாலிபர் மீது வடமாநில பெண் என்ஜினீயர் புகார்
திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து ஏமாற்றியதாக கோவை வாலிபர் மீது வடமாநில பெண் என்ஜினீயர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்தார்.
கோவை,
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகே உள்ள விஜய் கார்டன் பகுதியை சேர்ந்த 31 வயது பெண் கத்தார் நாட்டில் உள்ள விமான நிலையத்தில் என்ஜினீயராக உள்ளார். அவர் நேற்று மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராதிகா மற்றும் நிர்வாகிகளுடன் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்தார்.
பின்னர் அவர் போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாரை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 2014-ம் வருடம் முதல் கத்தார் நாட்டில் உள்ள விமான நிலையத்தில் என்ஜினீயராக உள்ளேன். அப்போது அங்கு பணியாற்றி வரும் கோவை வீரகேரளம் பகுதியை சேர்ந்த 31 வயது வாலிபருக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டது. பின்னர் அந்த நட்பு காதலாக மாறியது. நாங்கள் 4 ஆண்டுகள் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்ததால் பல்வேறு பகுதிகளுக்கு சென்றோம்.
எங்களின் காதல் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்தது. அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு எங்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறினார்கள். இதையடுத்து எனது பெற்றோர் வீரகேரளம் வந்து எனது காதலரின் பெற்றோரிடம் பேசினார்கள். பின்னர் நாங்கள் குடும்பத்துடன் திருவண்ணாமலை, திருப்பதி, மருதமலை ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தோம்.
எனது காதலர் மற்றும் அவருடைய சகோதரியுடன் ஊட்டிக்கும் சென்று தங்கினோம். நாங்கள் இருவரும் வெளியூர் சென்றபோது என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்தார். இந்த நிலையில் திடீரென்று அவர் உனது கலாசாரம் வேறு, எனது கலாசாரம் வேறு, உனக்கு தமிழ் தெரியாது என்றுக்கூறி என்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார்.
தற்போது அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து வருகிறார்கள். இதனால் அவர் விடுமுறை எடுத்துவிட்டு சொந்த ஊருக்கு வந்து உள்ளார். எனவே என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்துவிட்டு ஏமாற்றிய எனது காதலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு, இது தொடர்பாக வடவள்ளி மற்றும் பேரூர் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story