மசினகுடி அருகே, காட்டுயானை முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பீதி
மசினகுடி அருகே மாவனல்லா பகுதியில் காட்டு யானை முகாமிட்டு உள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
மசினகுடி,
மசினகுடி அருகே உள்ள மாவனல்லா வனபகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு படுகாயம் அடைந்த தும்பிக்கையுடன் ஒரு ஆண் காட்டு யானை வந்தது. சுமார் 40 வயது மதிக்கத்தக்க அந்த காட்டு யானையின் தும்பிக் கையில் ஏற்பட்டிருந்த காயங்களுக்கு வனத்துறை சார்பாக மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. தொடர் சிகிச்சை காரணமாக காயங்கள் குணமாகியது.
அப்போது அந்த காட்டு யானை வனத்துறையினருடன் மட்டுமின்றி பொதுமக்களுடனும் சகஜமாக பழகியது. இந்த யானைக்கு பிரபல கால்பந்து வீரர் ரிவால்டோவின் பெயர் கொண்டு அழைத்து வருகின்றனர். இதற்கிடையில் காட்டு யானை அருகில் யாரும் செல்ல கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த யானை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளையும், மரங்களையும் சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். கல்லட்டி மலை பகுதியில் சுற்றி திரிந்த அந்த யானை தற்போது மீண்டும் மாவனல்லா பகுதிக்கு வந்துள்ளது.
அங்குள்ள தனியார் நிலங்களில் சுற்றி திரியும் இந்த யானை நெடுஞ்சாலைக்கும், கிராமபுற சாலைகளுக்கும் அடிக்கடி வருகிறது. சில நேரங்களில் சாலையில் நடுவே வந்து நிற்கிறது. இதனால் அடிக்கடி மசினகுடி-ஊட்டி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
அவ்வாறு சாலைக்கு யானை வரும்போது, சிங்காரா வனத்துறையினர் பழம் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி வனப்பகுதிக்குள் அழைத்து செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. எனவே ரிவால்டோ யானையை அடர்ந்த வனபகுதிக்குள் அழைத்த சென்று விட முதுமலை புலிகள் காப்பக உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மசினகுடி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story