ஆழ்துளை கிணறு அமைத்தல் விதிகளை செயல்படுத்துவதே சுஜித்துக்கு செலுத்தும் அஞ்சலி - அதிகாரிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்
வேலூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பது தொடர்பான அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக செயல்படுத்துவது தான் நாம் சுஜித் மரணத்துக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வேலூர்,
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித்வில்சன் என்ற குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிக்கொண்டது. குழந்தையை மீட்க, மீட்பு குழுவினர் போராடினர். குழந்தை மீட்கப்பட வேண்டும் என அனைத்து தரப்பினரும் இறைவனிடம் வேண்டிக் கொண்டனர். ஆனால் சுஜித்வில்சன் பிணமாக மீட்கப்பட்டான். இந்த சம்பவம் தமிழகம் மட்டும் அல்லாமல் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தலைவர்கள், பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
குழந்தை சிக்கிக்கொண்டதை அடுத்து வேலூர் மாவட்டத்தில் திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக அறிவிக்கப்பட்ட வாட்ஸ் அப் எண்ணுக்கு வரப்பெற்ற புகார்களின் அடிப்படையிலும் பல்வேறு ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டது.
இந்த நிலையில் கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று காலை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எதிர்பாராதவிதமாக சுஜித் உயிரிழந்து விட்டான். ஆழ்துளை கிணறுகள் அமைப்பது தொடர்பான அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக செயல்படுத்துவது தான் நாம் சுஜித் மரணத்துக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும். எனவே வேலூர் மாவட்டத்தில் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள், நகராட்சி ஆணையாளர்கள், சப்-கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறந்தவெளியில் உள்ள ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
வேலூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் திறந்த நிலையில் காணப்பட்ட 12 ஆழ்துளை கிணறுகள் கண்டறியப்பட்டு மூடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story